யாழ்ப்பாணம் வந்த அவுஸ்திரேலிய அமைப்பு - அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் விபரிப்பு
யாழ்ப்பாணத்தில் கல்வி, பொருளாதார, சமூக முன்னேற்றங்களுக்கான செயற்பாடுகளை மேற்கொள்ளத் தீர்மானித்திருப்பதாக அவுஸ்திரேலியாவைத் தளமாகக் கொண்ட அரச சார்பற்ற நிறுவனமான ‘நூல்’ அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று(21.07.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே குறித்த அமைப்பின் ஸ்தாபகரான டேஷ் பாலசுப்ரமணியம் இதனைத் தெரிவித்துள்ளார்.
கல்வி, பொருளாதார, சமூக முன்னேற்றம்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை வரையிலான 1000கிலோமீட்டர் சைக்கிள் பயணத்தை அவுஸ்ரேலிய பிரஜைகள் உட்பட்ட நூல் அமைப்பின் தோழர்களோடு நாம் நிறைவு செய்துள்ளோம்.
இந்தப் பயணம் எமது சமூக சிந்தனைகளை மேம்படுத்த உதவும் அதேவேளை இந்தப் பயணத்திற்கான ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் வெளிநாட்டு வாழ் மக்களின் நிதி அன்பளிப்புகள் கிடைக்கப்பெறுவதுடன் குறித்த உதவி மூலம் இங்குள்ள செயற்றிட்டங்களை மேற்கொள்ள திட்டமிட்டிருக்கின்றோம்.

அத்துடன் இவ்வாறான செயற்பாடுகள் அடுத்த வருடம் ஜூலை மாதமும் நடாத்தப்படும். இது வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் நிலையங்கள் அமைக்கப்பட்டு கல்வி, சமூக, பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை ஏற்படுத்தும் இலக்கினைக் கொண்டுள்ளது.
மேலும், எதிர்வரும் 24ஆம் திகதி கொழும்பு - பம்பலப்பிட்டியில், அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் மற்றும் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் உள்ள கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரின் பங்கேற்புடன் ஓர் நிகழ்வு நடத்தப்படவுள்ளது.
அதேவேளை குறித்த நிகழ்வில் எமது பயணத்தின் அனுபவங்கள் மற்றும் சேகரிக்கப்பட்ட தரவுகள் மற்றும் விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடவுள்ளதுடன் எம்முடன் இணைந்து பல கலைஞர்களினால் வரையப்பட்ட ஓவியங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
செம்மணி மனிதப் புதைகுழியில் அமர்ந்திருந்த நிலையில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் குறித்து விரிவான ஆய்வு