மூன்று இளம் பிக்குகள் வன்புணர்வு! விகாராதிபதியின் பிணைக்கு ஒப்பமிட்டவர்களின் வீடுகள் மீது தாக்குதல்
சிறுவர் துஷ்பிரயோக குற்றசாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த விகாராதிபதியின் பிணைக்காக ஒப்பமிட்டவர்களில் சிலரின் வீடுகளின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரன் ராஜன் தெரிவித்துள்ளார்.
பிணையில் செல்ல அனுமதி
சிறுவர் துஷ்பிரயோக குற்றசாட்டில் அண்மையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த கல்முனை சுபத்ரா ராமய விகாரையின் விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரருக்கு கல்முனை நீதவான் நீதிமன்றத்தினால் கடந்த வெள்ளிக்கிழமை (30.09.2022) பிணை வழங்கப்பட்டிருந்தது.
இருப்பினும் அன்றைய தினம் பிணைக்கான ஆவணங்களை சமர்ப்பிப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக அவர் கடந்த செவ்வாய்க்கிழமை (04.10.2022) காலை மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து பிணையில் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
மூன்று தனித்தனி வழக்குகளுக்காக தலா மூவர் ஐந்து இலட்சம் என்ற அடிப்படையில் ஒன்பது பேரின் சரீர பிணையில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
பிணைக்கு ஒப்பமிடுவதில் ஏற்பாட்டாளராக இருந்து செயற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரன் ராஜன் சிறைச்சாலைக்கு சென்று அவரை அழைத்து வந்ததுடன், அப்பகுதியிலுள்ள வீடுகளில் இடம்பெற்ற வாணிவிழா பூஜைகளிலும் அவர் கலந்து கொண்டுள்ளார்.
வீடுகள் மீது தாக்குதல்
இந்நிலையில் கடந்த 4ஆம் திகதி (04.10.2022) இரவு விகாராதிபதியின் பிணைக்காக ஒப்பமிட்டவர்களில் சிலரின் வீடுகளின் மீது அடையாளம் தெரியாத நபர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கல்முனை 01ஊ சிங்கள பகுதியில் உள்ள முஸ்லிம் குடியேற்ற தொடர்மாடி குடியிருப்பு பகுதிக்கு முன்னால் உள்ள 2 வீடுகள் மீதே இவ்வாறு வாள் மற்றும் கற்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.