அமெரிக்கத் தூதுவரின் வடக்கிற்கான விஜயம் மற்றும் தெற்கு அறிந்திராத வடக்கின் செய்திகள்
ஒக்டோபர் 22ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரையிலான வாரத்தில் தமிழ் அரசியல் பொது வெளியில் நடந்த பல சிறப்பு நிகழ்வுகள் தமிழ் நாளிதழ்களின் பக்கங்களில் பதிவாகியுள்ளன.
அவற்றில் சில தென்னிலங்கை நாளிதழ்களால் ஓரளவு உணரப்பட்டாலும், தமிழ் அரசியல் சூழலில் தோன்றிய சில போக்குகள், நிகழ்வுகள் அல்லது உரையாடல்கள் தமிழ்ப் பத்திரிகைகளுக்கு மட்டும் மட்டுப்படுததப்பட்டுள்ளமையை அவதானிக்க கூடியதாக இருந்தது.
தமிழ் நாளிதழ்களின் விசேட கவனத்தைப் ஈர்த்த ஆனால் தென்னிலங்கையை மையமாகக் கொண்டு வெளியிடப்படும் பத்திரிகைகளில் மூன்று அல்லது நான்கு செய்தி அறிக்கைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட விசேட நிகழ்வாக அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங்கின் யாழ்ப்பாண விஜயம் அமைந்திருந்தது.
அமெரிக்கத் தூதுவரின் வருகையின் தொடக்கம் முதல் இறுதி வரை, அதாவது அக்டோபர் 24 முதல் 27 வரையிலான விரிவான செய்திகள் பல தமிழ்ப் பத்திரிகைகளில் வெளியாகியிருந்தன.
ஒக்டோபர் 25ஆம் திகதி சிலோன் டுடே நாளிதழின் மூன்றாவது பக்கத்தில், யாழ் பல்கலைக்கழகத்திற்கான அமெரிக்கத் தூதுவரின் வருகைபற்றிய சுருக்கமான செய்தி ஒன்று அறிக்கையிடப்பட்டிருந்தது. தூதுவரின் ட்விட்டர் செய்தியை மேற்கோள்காட்டி, தனது யாழ்ப்பாண விஜயத்தின் நோக்கங்களை அதில் குறிப்பிட்டுள்ளதுடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தான் சந்தித்த பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகளின் பட்டியலும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதேவேளை, ஒக்டோபர் 26ஆம் திகதி திவயின நாளிதழின் மூன்றாவது பக்கத்தில் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோருடன் கூடிய புகைப்படம் வெளியாகியிருந்தது
அத்துடன், அதற்குக் கீழ் அமெரிக்க தூதுவரின் யாழ்ப்பாண விஜயம் தொடர்பில் அடிப்படையாக அமைந்த அவரது ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்கள் மாத்திரம் சில வாக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதேவேளை, ஒக்டோபர் 27ஆம் திகதி மவ்பிம நாளிதழின் முதற்பக்கத்தில் 'தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கம்பற்றி ஜூலி சாங்கிற்கு தகவல் கூறுகின்றது' என்ற தலைப்பில் செய்தி வெளியாகியுள்ளது. அதிகாரப் பரவலாக்கத்தில் தற்போதைய அரசாங்கம் சாதகமாகச் செயற்படாது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் மற்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் அமெரிக்கத் தூதுவரிடம் வடக்கிற்கான விஜயத்தின் போது தெரிவித்துள்ளனர்.
குறித்த செய்தி அறிக்கையானது வெறும் அமெரிக்கத் தூதுவரின் வடகிற்கான விஜயம் பற்றிய செய்திக்கு அப்பால் தமிழ் அரசியல் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் உள்ளடக்கம் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டாலும் அந்தத் தலைப்புச்செய்தியில் மறுப்புத் தொனி காணப்படுகின்றது.
இதேவேளை, அமெரிக்கத் தூதுவர் மற்றும் அவரது குழுவினரின் யாழ். விஜயம் ஏறக்குறைய அனைத்து தமிழ்ப் பத்திரிகைகளிலும் ஒரு செய்தியாகத் வெளிவந்துள்ளது.
மேலும், அவர் யாழ்ப்பாணத்தில் கழித்த மூன்று நாட்களில் நடந்த கருத்துப் பரிமாற்றங்கள் மற்றும் அவற்றின் உள்ளடக்கங்கள் குறித்து பெரும்பாலான தமிழ்ப் பத்திரிகைகள் வெவ்வேறு கோணங்களில் விரிவாகச் செய்தி வெளியிட்டிருந்தன.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங், வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனை சந்தித்தது. குறித்து ஒக்டோபர் 24ஆம் திகதி காலைக்கதிர் பத்திரிகையின் முதல் பக்கத்தில் செய்தி வெளியானது. வடமாகாண அபிவிருத்தி நடவடிக்கைகள், கல்வி, சுற்றுலாத்துறை, காணி விடுவிப்பு, போக்குவரத்து உட்கட்டமைப்பு வசதிகள், வர்த்தக வாய்ப்புகள், முதலீடுகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இருதரப்பும் கலந்துரையாடியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், காணி விடுவிப்பு தொடர்பில் ஆளுநரிடம் தூதுவர் தகவல்களை வினவியபோது, அனுமதியற்ற காணி ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து இடம்பெறுவதாகவும், அவற்றைத் தீர்ப்பதற்கு தற்போதைய ஆளும் கட்சியுடன் கலந்து ஆலோசித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஆளுநர் தெரிவித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
வடக்கின் உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்வதற்கு ஆதரவளிக்குமாறு தூதுவரிடம் ஆளுநர் கோரியதாகவும், அதற்கு அவர் தனது உடன்பாட்டை வெளிப்படுத்தியதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதியசுதந்திரன், தினக்குரல் மற்றும் தமிழன் நாளிதழ்களில் இச்சந்திப்பு பற்றிய ஒத்த உள்ளடக்கத்துடன் கூடிய செய்திகள் வெளியாகியிருந்தன.
தமிழ் நாளிதழ்களில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, யாழ்ப்பாணத்திற்கான தனது விஜயத்தின் போது, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் தமிழ்க் கட்சிப் பிரதிநிதிகளைச் சந்தித்து, தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து கலந்துரையாடினார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழரசுக் கட்சியின் சிவஞானம் சிறீதரன், அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் ஒக்டோபர் 25ஆம் திகதி தினக்குரல், தமிழன் பத்திரிகைகளிலும், 26ஆம் திகதி காலைக்கதிர், புதியசுதந்திரன் பத்திரிகைகளிலும் செய்திகள் வெளியாகின.
தமிழ் மக்கள் தொடர்பில் புதிய அரசாங்கம் எவ்வாறு செயற்படும் என அமெரிக்கத் தூதுவர் வினவிய போது மக்கள் விடுதலை முன்னணியின் கடந்த கால செயற்பாடுகளைச் சுட்டிக்காட்டி அவர்கள் அதிகாரப் பகிர்வுக்கு ஆதரவாக இல்லை எனவும் தர்மலிங்கம் சித்தார்த்தன் கூறியதாக அந்தச் செய்திகள் தெரிவிக்கின்றன. பொதுத் தேர்தலுக்குப் பின்னர், இதுகுறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாக அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் தெரிவித்ததாக அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் கட்சிகள் ஏன் பிளவுபட்டுள்ளன?
மேலும், ஒக்டோபர் 26ஆம் திகதி ஈழநாடு நாளிதழில் வெளியான செய்தியின்படி, அமெரிக்கத் தூதுவர் தமிழ் அரசியல்வாதிகளிடம் ஒரு சுவாரஸ்யமான மற்றும் மிக முக்கியமான கேள்வியொன்றை எழுப்பியிருந்தார்.
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்பட்ட தமிழ் கட்சிகள் ஏன் பிளவுபட்டுள்ளன? இந்தக் கட்சிகள் ஒன்று சேர்ந்து செயல்பட முடியாதா? அதற்கான சாத்தியக்கூறு உள்ளதா?” இதுகுறித்து ஈழநாடு நாளிதழ் பின்வருமாறு செய்தி வெளியிட்டிருந்தது.
" வடக்குக்கு நேற்று முன்தினம் விஜயம் செய்த அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தையும் கட்சியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரனையும் யாழ்ப்பாணத்தில் தனியார் ஹோட்டல் ஒன்றில் சந்தித்துப் பேசியபோது தமிழ் அரசியல் கட்சிகள் எல்லாம் வெட்கித் தலைகுனிய வேண்டிய கேள்விகளை கேட்டாரென செய்திகள் வெளியாகியிருக்கின்றன.."
அவற்றுக்குப் பதிலளித்த பொன்னம்பலம் தங்களைப் பொறுத்தவரை, ஒற்றையாட்சி மற்றும் அரசமைப்பின் 13ஆவது திருத்தம் போன்ற விடயங்கள் தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாகவே கூட்டமைப்பிலிருந்து வெளியேறவேண்டி வந்தது என்றும் அந்த நிலைப்பாட்டில் தாங்கள் தொடர்ந்தும் இருந்து வருகின்றனர் எனவும் கூறியிருக்கிறார்.
மற்றைய தமிழ்க்கட்சிகள் பிரிந்து நிற்பதற்கான காரணம் தங்களுக்கு விளங்கவில்லை என்றும் குறிப்பிட்ட அவர், கொள்கையளவில் அந்தத் தமிழ்க் கட்சிகளுக்கு இடையில் வேறுபாடுகள் இல்லை என்பதால் அவர்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகளை அவர்களிடமே கேட்டறிய வேண்டும் என்று அமெரிக்கத் தூதுவரிடம் கூறிவைத்தாரென எனவும் அவர் அமெரிக்க தூதுவரிடம் தெரிவித்ததாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 27ஆம் திகதி, சண்டே டைம்ஸ் நாளிதழில் குறித்த பிரச்சினை பற்றிய சிறிய செய்தியொன்று வெளியானது. பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே தமிழ் மக்கள் மனதில் எரிந்துகொண்டிருந்த கேள்வியை அமெரிக்கத் தூதுவர் தமிழ் அரசியல் பிரதிநிதிகளிடம் கேட்டதாக அந்த அறிக்கையில் வெளியிடப்பட்டிருந்தது.
அங்குத் தமிழ் கட்சிகளுக்கு இடையே தெளிவான கொள்கை வேறுபாடு இல்லாத நிலையில் தமிழ் கட்சிகள் பல குழுக்களாகப் பிரிந்து செயற்படுவது ஏன் என்ற கேள்விக்குத் தமிழ்ப் பத்திரிகைகளில் குறிப்பிடப்பட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பதிலை ஒத்த உள்ளடக்கத்தை குறித்த ஆங்கில பத்திரிகையிலும் அறிக்கையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கத் தூதுவர் வடக்கிற்கான விஜயத்தின்போது மன்னார் மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களைச் சந்தித்து அவர்களின் நிலைமைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து அந்த மக்களுடன் கலந்துரையாடியதாக ஒக்டோபர் 26ஆம் திகதி புதியசுதந்திரன் மற்றும் 27ஆம் திகதி காலைக்கதிர் பத்திரிகைகள் செய்தி வெளியிடப்பட்டுள்ளன.
இந்தச் சந்திப்பு குறித்து தூதர் ஜூலி சாங் தனது X தளத்தில் பதிவிட்ட கருத்தை மேற்கோள் காட்டி, காணாமல் போன உறவினர்களை இன்னும் தேடும் குடும்பங்கள் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றிய உண்மையை அறிய உரிமை உண்டு என்று குறித்த செய்தித்தாள்கள் அறிக்கையிட்டுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் ஒக்டோபர் 24ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை வடக்கிற்கான விஜயம் தொடர்பில் தமிழ்ப் பத்திரிகைகள் இவ்வாறான விரிவான தகவல்களை வழங்கிய போதும், தென்னிலங்கையில் உள்ள நான்கு சிங்கள, ஆங்கிலப் பத்திரிகைகள் மாத்திரமே இந்தச் செய்தி தொடர்பில் சற்று கவனம் செலுத்தியிருந்தன.
மேலும் அவற்றில் மிகச் சிறிய அளவிலேயே செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. தமிழ் மக்களுக்குக் காணப்படும் பிரதான பிரச்சினைகள் தொடர்பில் அமெரிக்கத் தூதுவர் கரிசணை செலுத்துவது தொடர்பில் தமிழ் பத்திரிகைகளில் அதிக கவனம் செலுத்தும் போது தென்னிலங்கை பத்திரிகைகள் குறித்த நிகழ்வு தொடர்பில் மிகக் குறுகிய அளவிலான கவனத்தையை செலுத்தியிருந்தது. தென்னிலங்கை பத்திரிகையின் குறித்த செயற்பாட்டின் மூலம் நாம் விளங்கிக்கொள்ள வேண்டியது தென்னிலங்கை ஊடகங்கள் எவ்வாறு வடக்கில் காணப்படும் விசேட பிரச்சினைகளை மிக எளிதாகச் சித்தரிக்கின்றது என்பதாகும்.
தென்னிலங்கை நாளிதழ்கள்
தென்னிலங்கையால் உணரப்பட்ட வடக்கின் நிகழ்வுகள் குறித்து தென்னிலங்கைப் பத்திரிகைகளின் பக்கங்கள் நிரம்ப மிகுந்த கரிசனையுடன் எழுதப்பட்ட சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன.
ஆனால் சில சமயம் தெற்கிற்கு தெரியாத அல்லது உணராத நிகழ்வுகள் வடக்கில் நடந்தால் அவைகளை குறித்து தென்னிலங்கை பத்திரிகைகள் குறித்த செய்தியை நழுவ விடுகின்றன. இவ்வாறு கடந்த வாரம் தென்னிலங்கை அறியாத அல்லது உணராத சில சம்பவங்களை தமிழ் பத்திரிகைகளில் அறிக்கையிடப்பட்டிருந்தது.
ஒக்டோபர் 22 ஆம் திகதி அன்று மாலைக்கதிர் நாளிதழின் முதல் பக்கத்தில் பின்வருமாறு தலைப்பிடப்பட்டிருந்தது: “வலுக்கிறது வல்லரசுப்போர் இந்திய - சீனத் தூதரகங்கள் ஏட்டிக்குப் போட்டி"
அந்த அறிக்கையில், இலங்கையில் உள்ள இந்திய மற்றும் சீன தூதரகங்கள், யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் சமூகத்திற்கு, ஏட்டுக்குப் போட்டி, கல்வி உதவித்தொகை வழங்க முன்வந்துள்ள விவரம் செய்தி அறிக்கையிடப்பட்டிருந்தது. உதவித்தொகை வழங்கும் விழா அந்தந்த பல்கலைக்கழகங்களில் ஏற்பாடு செய்யப்படும் என்றும், இந்தியா மற்றும் சீன தூதரகங்களின் அதிகாரிகளும் இதில் பங்கேற்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
இது வடகிழக்குப் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் புலமைப்பரிசில் திட்டங்களின் விளக்கமாக மேலோட்டமாகத் தோன்றினாலும், இதில் காணப்படும் தீவிரமான மற்றும் செல்வாக்குமிக்க புவிசார் அரசியலை புரிந்து கொண்டால், இந்தச் செய்தியானது தமிழ் செய்தித்தாள்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாது.
அத்துடன் கடந்த ஒக்டோபர் 25ஆம் திகதி காலைமுரசு நாளிதழ் முதற்பக்கத்தில் தமிழரசு கட்சி புதிய அரசாங்கத்துடன் செய்து கொண்ட உடன்படிக்கை தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவின் அறிக்கை பிரதான செய்தியாக வெளியிட்டிருந்தது. அதில் கூறியிருப்பதாவது:
2015 இல் ஆரம்பமான சமஷ்டி அரசமைப்பை இயற்றும் பணியை தொடர்ந்து முன்னெடுத்தல் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30-1 தீர்மானத்திலிருந்து இலங்கை விலகி இருந்தாலும், அதனை மீள அமுல்படுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.- இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இந்த இரு நிபந்தனைகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இணக்கம் தெரிவித்துள்ளார்.
எனவே, புதிய அரசில் தமிழரசுக் கட்சி இணையும். வெளிவிவகார அமைச்சராக எம்.ஏ.சுமந்திரன் நியமிக்கப்படவுள்ளார் என்று பிவிருது ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். சுமந்திரனுக்கு வெளிவிவகார அமைச்சுப் பதவி வழங்குவது குறித்த பிரச்சினையல்ல இது, மாறாக முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனைகளே பிரச்சினையென உதய கம்மன்பில தெரிவித்ததாகவும் அந்த அறிக்கையின் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் பின்னர் ஒக்டோபர் 28ஆம் திகதி காலைமுரசு, காலைக்கதிர், ஈழநாடு ஆகிய பத்திரிகைகள் உதய கம்மன்பிலவின் குறித்த அறிக்கைக்குப் பதிலாக நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்த கருத்து முதல் பக்கத்தில் பிரசுரிக்கபட்டிருந்தது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்திக்கும் தமிழ் அரசியல் தலைவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளிக்கவில்லையென மூன்று பத்திரிகைகளும் செய்தி வெளியிட்டிருந்தன.
தமிழ் அரசியல் தலைவர்களான டக்ளஸ் தேவானந்தா, சிவஞானம் சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன் போன்றோரை ஜனாதிபதி சந்தித்ததாகவும் ஆனால் அவர்களில் எவருக்கும் அமைச்சர் பதவிகளை வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளிக்கவில்லை எனவும் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தென்னிலங்கையின் சிங்கள, ஆங்கிலப் பத்திரிகைகளில் உதய கம்மன்பிலவின் இவ்வாறானதொரு அறிக்கை பற்றியோ அல்லது பிமல் ரத்நாயக்க அதற்குப் பதிலளித்தமை பற்றியோ ஒரு செய்தியும் வரவில்லை.
இந்நாட்டு சிறுபான்மை மக்களின் உரிமை தொடர்பில் இனவாத விளையாட்டில் ஈடுபட்டு அரசியல் ஆதாயம் தேட எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் உதய கம்மன்பில போன்ற சிங்கள பௌத்த பேரினவாத அரசியல்வாதிகளின் இவ்வாறான கூற்றுக்கு வழமையாகத் தமது அனுசரணையை வழங்கும் அருண, த மோர்னிங் போன்ற பத்திரிகைகளில் கூட இந்த செய்தியை வெளியிடுவதற்கு கரிசனை செலுத்தாததிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது குறித்த வெற்று வெளிப்படுத்தல்களில் காணப்படும் உணமைத்தன்மை தொடர்பில் நாம் மீண்டும் சிந்திக்க வேண்டும் என்பதாகும்.
(வடக்கு, கிழக்கு மற்றும் பெருந்தோட்ட மலையக மக்கள் உட்பட விளிம்புநிலை மக்களின் கோரிக்கைகள் மற்றும் உரிமைகள் குறித்து வடக்கு மற்றும் தெற்கின் அரசியல் மேடைகளில் தென்பட்ட உரையாடல்கள் மற்றும் கருத்துக்கள் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிகைகளில் எவ்வாறு பிரதிபலிக்கின்றன என்பது பற்றிய ஆய்வின் அடிப்படையில் இந்தக் கட்டுரை அமைந்துள்ளது. இந்தக் கட்டுரைக்கு ஒக்டோபர் 22 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மூன்று மொழிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தி நாளிதழ்களின் பிரசுரமான செய்திகளின் மாதிரியை அடிப்படையாகக் கொண்டமைந்துள்ளது.)
கட்டுரை - சுபாஷினி சதுரிகா
மொழிபெயர்ப்பு - ரிக்சா இன்பாஸ்
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Parthiban அவரால் எழுதப்பட்டு, 18 November, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.