தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினது தேசியப்பட்டியலுக்கு முஸ்லிம் புத்திஜீவியை நியமியுங்கள்! வஃபா பாறூக்
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு அதற்கு கிடைத்திருக்கின்ற தேசியப்பட்டியல் ஆசனத்தை ஏதேனும் வாய்ப்பிருந்தால் புரிந்துணர்வு அடிப்படையில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் புத்திஜீவி ஒருவருக்கு தற்காலிகமாக கொடுத்து உதவ வேண்டுமென கிழக்கு தேச விடுதலை இயக்கத்தின் தலைவரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இஸ்தாபகப் பொருளாளருமான வஃபா பாறூக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
முஸ்லிம்களின் தனித்துவ அரசியல் அர்த்தமிழந்து கொண்டே செல்கின்ற கால கட்டமொன்றில் நாமிருக்கின்றோம்.
ஒரு பக்கத்தில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தால் நசுக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். இன்னொரு பக்கத்தில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொள்கைகளை இழந்தவர்களாக நல்ல பிள்ளைகளைப் போல முக்கியமான தருணங்களில் அரசாங்கத்துக்கு நடந்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், இந்நாட்டிலுள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்கள் மீதும் திட்டமிட்ட வகையில் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்ற ஜனாஸாக்கள் எரிப்புக்கெதிராக தமிழ்த்தரப்புகள் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் குரல் கொடுத்து வருவது முஸ்லிம் மக்களுக்கு புதிய நம்பிக்கை ஒளியை ஏற்படுத்தி, ஆறுதலைத் தந்திருக்கின்றது.
சிங்களத்தரப்பினரை விடுத்து தமிழ்த்தரப்பினருடன் இணைந்து அரசியலை முன்னெடுத்துச் செல்வது தான் முஸ்லிம்களுக்கு இருக்கக்கூடிய பொருத்தமான விருப்பத்தெரிவாகும்.
ஏனெனில், நாம் தாய்மொழியால் ஒன்றாக இணைந்திருப்பவர்கள். எமது உரிமைகளை சிங்களத்திடமிருந்து மீட்டெடுக்க வேண்டியவர்களாகவுள்ளோம்.தமிழ்த்தேசியமும், முஸ்லிம் தேசியமும் ஒன்றாக இணைந்தும், இணங்கியும் பரந்துபட்டளவில் செயற்பட வேண்டியது காலத்தின் அவசியமாகும்.
அதேபோல, வருகின்ற தேர்தல்களில் தமிழ்த்தரப்பினர்களின் கட்சிகளில் முஸ்லிம் பெரும்பான்மைப் பிரதேசங்களில் முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவது கூட மிகப் பொருத்தமான வரவேற்புக்குரிய விடயமாக இருக்கும்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த தேசியப்பட்டியல் ஆசனம் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களைக் கருத்திற்கொண்டு சகோதரர் கலையரசனுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.
பெரும்பான்மைக் கட்சிகளிலும், முஸ்லிம் கட்சிகளிலும் உள்ள முஸ்லிம் எம்.பிகளின் குரல்கள் அடக்கப்பட்டும், அடங்கியுமுள்ள தற்போதைய இக்கட்டான சூழலில் ஏதேனும் வாய்ப்புகள் இருக்குமானால், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியலை தற்காலிகமாக சிறிது காலத்துக்கு அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் புத்திஜீவி ஒருவருக்கு தந்துதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.