சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (O/L) பரீட்சைக்கான விண்ணப்பங்களை இந்த மாதம் 23 ஆம் திகதி வரை இணையவழியில் சமர்ப்பிக்கலாம் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
அனைத்து பாடசாலை விண்ணப்பதாரர்களும் தத்தமது பாடசாலை அதிபர்கள் மூலமாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தனியார் பரீட்சார்த்திகளுக்கான அறிவுறுத்தல்
அதேசமயம் தனியார் பரீட்சார்த்திகள் விண்ணப்பங்களை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பரீட்சைக்கு விண்ணப்பிக்கும்போது, தனியார் பரீட்சார்த்திகள் தங்களின் தேசிய அடையாள அட்டையை (NIC) பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
தேசிய அடையாள அட்டை இல்லாத தனியார் பரீட்சார்த்திகள், விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் முன், தங்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி முதலில் பதிவு செய்ய வேண்டும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic என்ற இணையதளங்களுக்குச் சென்று, அங்கு வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளைக் கவனமாகப் படித்து, அதற்கேற்பத் தங்களின் விண்ணப்பங்களைத் துல்லியமாகச் சமர்ப்பிக்க வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே மேலும் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பாக வைக்க வேண்டிய ஆவணங்கள்
விண்ணப்பத்தின் அச்சிடப்பட்ட நகலைப் பதிவிறக்கம் செய்து, எதிர்காலத்தில் தேவைப்பட்டால் சமர்ப்பிப்பதற்காகப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

பாடசாலை மாணவர்களின் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்குத் தேவையான பயனர்பெயர்கள் மற்றும் கடவுச்சொற்கள் பாடசாலை அதிபர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 23ஆம் திகதி நள்ளிரவு 12:00 மணிக்கு மேல் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும், விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான காலக்கெடு எந்தச் சூழ்நிலையிலும் நீட்டிக்கப்படாது என்றும் பரீட்சைகள் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.