அரசியல் தீர்வு விடயம் தொடர்பில் தமிழர் தரப்பிடம் அநுர தரப்பு விடுத்துள்ள கோரிக்கை
அரசியல் தீர்வு விடயம் தொடர்பில் பொதுவான நிலைப்பாட்டை எடுக்க தமிழ்த் தலைவர்கள் சகலரும் ஓரணியில் சங்கமிக்க வேண்டும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயம் தொடர்பில் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு நிலைப்பாடுகளுடன் இருக்கின்றார்கள்.
தீர்க்கமான முடிவு
தமிழ் மக்களின் பிரதிநிதிகளான அவர்கள் அனைவரும் ஓரணியில் இணைந்து தீர்வு விடயம் தொடர்பில் பொதுவான நிலைப்பாட்டைத் தெரிவித்தால் அது தொடர்பில் நாம் ஆராய்ந்து தீர்க்கமான முடிவை அறிவிப்போம்.
அதைவிடுத்து ஒவ்வொரு தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும் தீர்வு தொடர்பில் தெரிவிக்கும் வெவ்வேறு விதமான கருத்துக்களுக்கு எம்மால் பதில் கூற முடியாது.
அண்மையில் சிறீதரன் தலைமையிலான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து தீர்வு விடயம் தொடர்பில் தங்கள் நிலைப்பாட்டைத் தெரிவித்தார்கள்.
அரசியல் தீர்வு உறுதி
இதை நாங்கள் வரவேற்கின்றோம். ஆனால், சில தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் ஜனாதிபதியை சந்திக்காமல் தீர்வு விடயம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்து வருகின்றார்கள்.
முதலில் தமிழ்க் கட்சிகளுக்கிடையில் ஒற்றுமை வேண்டும். தீர்வு விடயம் தொடர்பில் அவர்கள் பொதுவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.
வெளியில் இருந்துகொண்டு அரசை விமர்சிப்பதால் எந்தப் பயனும் இல்லை. புதிய அரசமைப்பில் அரசியல் தீர்வு உறுதி. இது எமது தேர்தல் கால வாக்குறுதி. இதை நிறைவேற்றியே தீருவோம்” என்றுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |