தமிழர்களை தொடர்ந்து அலட்சியப்படுத்தும் அநுர அரசாங்கம் : சிறிநாத் சாடல்
தற்போதைய அரசாங்கமும் தமிழ் தேசிய இனத்தினை அலட்சியப்படுத்துகின்ற, அவர்களின் நியாயமான கோரிக்கையினை செவிமடுக்காத போக்கில் இந்த பௌத்த சிங்கள பேரினவாத அரசாங்கம் நடந்து கொள்கின்றது என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநாத் தெரிவித்துள்ளார்.
தமிழின அழிப்பு வாரம் இன்று(12) மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தில் உணர்வுபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அப்பாவி மக்கள் படுகொலை
மேலும் தெரிவிக்கையில், “எங்கெங்கு தமிழர்கள் கொத்துக்கொத்தாக அழிக்கப்பட்டார்களோ அங்கு எல்லாம் இனஅழிப்பு வார நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
இந்த சத்துக்கொண்டான் பகுதியிலே பாரிய படுகொலைகள் நடாத்தப்பட்ட வரலாறுகள் இருக்கின்றது. ஒரு இன அழிப்பு நோக்குடன் வடகிழக்கில் பல படுகொலைகள் நடாத்தப்பட்டதுடன் எமது விடுதலைப் போராட்டத்தினை நசுக்குவதற்காக பல இடங்களில் படுகொலைகள் நடாத்தப்பட்டிருந்தது.
சத்துருக்கொண்டானின் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொண்டு செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்கள். இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டாலும் அந்த விசாரணைகள் பின்னர் முடக்கப்பட்டது.
இன்று இந்த அரசாங்கம் பட்டலந்த வதைமுகாம் விடயங்களை கையிலெடுத்து அது தொடர்பான விசாரணைகளை மீள முன்னெடுத்திருக்கும் அதேநேரம், வடக்கு கிழக்கு பல இடங்களில் படுகொலைகள் நடைபெற்ற வரலாற்றின் சாட்சியங்களாகவும் ஆவணங்களாகவும் இருக்கின்ற போதிலும் அது தொடர்பான எந்த முன்னெடுப்புகளும் மேற்கொள்ளப்படாமல் தமிழ் மக்களை உதாசீனப்படுத்துகின்றது.
சுபீட்சமான நாடாக மாறுவதற்கு
2009ஆம் ஆண்டு யுத்தத்தின் இறுதிக்கட்டத்திலே பொதுமக்கள் கொத்துக்கொத்தாக இலட்சக்கணக்கில் கொல்லப்பட்ட சம்பவமானது தமிழினத்தினை இந்த நாட்டில் இல்லாமல் செய்வதற்கும் தமிழ் மக்கள் தமது உரிமைகளை இனி ஒருபோதும் போராடி கேட்ககூடாது என்ற அடிப்படையிலே பல்வேறு திட்டமிட்ட படுகொலைகள் நடந்தேறியது.
இந்த படுகொலைகளுக்கான நீதி நியாயம் கூட எந்தவகையான வழிகளிலும் நடைபெறவில்லை. யுத்தம் மௌனிக்கப்பட்டு 16 வருடங்க்ள கடந்துள்ள நிலையிலும் நீதி நியாயத்திற்காக தமிழ் தேசிய சக்திகள் தமிழ் இனத்தில் பற்றுக்கொண்ட அமைப்புகள் முன்னெடுக்கின்றபோதிலும் அதற்கான எந்த அங்கீகாரத்தினையும் இந்த நாடு வழங்கவில்லை
இவ்வாறான செயற்பாடுகள் இந்த நாட்டில் நியாயமாக, நிம்மதியாக வாழமுடியும் என்ற நம்பிக்கையினை இல்லாமல் செய்துள்ளது.
இன்று இந்த பொருளாதார நெருக்கடிக்கு கூட தமிழ் மக்கள் இரண்டாம் தரப்பாக அடக்கி ஒடுக்கப்படுதலே காரணமாக அமைந்திருக்கின்றது.
இவற்றினை சிங்கள தேசிய இனம் புரிந்து கொள்ளாத நிலையில் இந்த நாடு சுபீட்சமான நாடாக மாறுவதற்கு எந்தவிதமான வாய்ப்புகளும் இல்லை” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






