இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட மற்றுமொரு உதவி திட்டம்
74 கோடி ரூபாய் மதிப்புள்ள அரிசி, பால் மா உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், மதுரை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு இன்று சனிக்கிழமை மக்களவை உறுப்பினர் கனிமொழியால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழகம் 100 கோடி ரூபாய் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்களை இலங்கைக்கு இரண்டு முறை அனுப்பியுள்ளது.
இந்த நிலையில் தி.மு.க.பெரியாரின் கொள்கைகளை பின்பற்றுக்கிறது என்றும், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஏழை மக்களுக்கு உதவுவது அரசாங்கத்தின் தன்னிச்சையான முடிவு என்றும் கனிமொழி இதன்போது கூறியுள்ளார்.
உதவி திட்டம்
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,"மாநில அரசாங்கம் முதல் தவணையாக சென்னை காமராஜர் துறைமுகத்தில் இருந்து 33 கோடி இந்திய மதிப்பிலான பொருட்களை அனுப்பியது, அடுத்த சரக்கு தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 67 கோடி ரூபா மதிப்பிலான அரிசி, மருந்துகள், பால் மா உள்ளிட்ட பொருட்கள் அனுப்பப்பட்டன.
அந்தவகையில் இன்று, இலங்கை தேசத்தில் உள்ள மக்களுக்கு மற்றொரு கப்பலில் பொருட்களை அனுப்புவது மகிழ்ச்சி அளிக்கிறது.
இலங்கையில் உள்ள தலைவர்கள் விரைவில் நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வருவார்கள் மற்றும் மக்கள் அமைதியான சூழலில் வாழ்வதை உறுதி செய்வார்கள் என்று தாம் நம்புகின்றோம்" என தெரிவித்துள்ளார்.
துறைமுக அதிகாரிகளின் கருத்து
இதேவேளை இன்றைய கப்பலில் 16,356 மெட்ரிக் தொன் அரிசி, 201 மெட்ரிக் தொன் பால் மா
மற்றும் 39 தொன் மருந்துப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவதாக
துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.