11 பேர் கடத்தல் விவகாரம்! சட்டமா அதிபர் கப்பம் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு
11 பேரை கடத்தி காணாமல் ஆக்கியமைத் தொடர்பில் முன்னாள் கடற்படைத் தலைவரை விடுவிக்க சட்டமா அதிபர் கப்பம் பெற்றுள்ளதாக மனித உரிமை குழு ஒன்று குற்றம் சாட்டியுள்ளது.
சட்டமா அதிபருக்கு கிடைத்த ஏதோ சலுகை அல்லது இலாபத்தின் அடிப்படையிலேயே, வழக்கு விசாரணை நிறைவடைவதற்கு முன்னதாகவே, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மீதான குற்றப்பத்திரிகையை திடீரென மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்த பின்னர், காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தின் தலைவர் பிரிட்டோ பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
2008-2009 காலப்பகுதியில் மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் கடத்தப்பட்டு காணாமல் போனமை தொடர்பாக முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட உள்ளிட்ட 14 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு கடந்த 4ஆம் திகதி உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை தொடரமுடியாது என சட்டமா அதிபர் அறிவித்திருந்தார்.
சட்டமா அதிபர் நாயகமும், அரச சட்டத்தரணியும் ஏதோ ஒரு அரசியல் அதிகாரத்தின் தவறான நடத்தை அல்லது சலுகைக்காக பிரதிவாதியான கரன்னாகொடவின் குற்றச்சாட்டுகளை அகற்ற சட்டவிரோதமாக முயற்சித்துள்ளதாக காணாமல் போனவர்களின் குடும்பங்கள் குற்றம் சாட்டுகின்றன.
இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை சட்டத்தின் கீழ் இது ஒரு குற்றவியல் குற்றம் என சுட்டிக்காட்டிய காணாமல் போனவர்களின் குடும்பங்கள், இதுத் தொடர்பில் உடனடியாக விசாரணை செய்து பதின்மூன்று வருடங்களாக தங்கள் அன்புக்குரியவர்களுக்காக நீதி கேட்டு போராடும், பெற்றோருக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடத்தப்பட்ட மற்றும் காணாமல் போன 11 பேரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடந்த 5ஆம் திகதி சட்டமா அதிபர் சஞ்சய ராஜரத்னத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா




