கோர விபத்தில் சிக்கி உயிரிழந்த தம்பதி தொடர்பில் வெளியான தகவல்
அக்குரஸ்ஸ - சியம்பலாகொட - பிடபெத்தர வீதியில் போபகொட சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போபகொட சந்திக்கு அருகில் நேற்று (25) மாலை இடம்பெற்ற விபத்தில் பாடசாலை ஆசிரியை ஒருவரும் அவரது கணவரும் உயிரிழந்திருந்தனர்.
இந்த விபத்தில் 28 வயதான பாக்யா பொரலஸ்ஸ மற்றும் அவரது கணவர் இந்திக்க சம்பத் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த ஆசிரியை பிடபெத்தர மெதெரிபிட்டிய பாடசாலையில் சுமார் 5 வருடங்களாக கடமையாற்றிய நிலையில் வேறு பாடசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
விபத்திற்கான காரணம்
இதனையடுத்து பாடசாலையில் இடம்பெற்ற பிரியாவிடை நிகழ்வில் தனது கணவருடன் கலந்து கொண்டு வீடு திரும்பும் போது வாகன விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள், சொகுசு வான் மீது மோதியமையே விபத்திற்கான காரணம் என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம், அப்பகுதி மக்கள் காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சுமார் 20 நிமிடங்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
விபத்து நடப்பதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னர் எனக்கு அழைப்பினை ஏற்படுத்தி உரையாடியதாகவும், பாடசாலையில் வழங்கப்பட்ட பரிசில்கள் வீதியில் சிதறிக்கிடப்பதாகவும் சக ஆசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் வான் சாரதியான வர்த்தகர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் குடிபோதையில் இருந்தாரா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |