இலங்கைக்கான விமானங்கள் இரத்து செய்யப்படுகிறதா..! வெளியாகியுள்ள தகவல்
இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை நிலவுவதால் இலங்கைக்கான விமானங்களை சர்வதேச விமான நிறுவனங்கள் இரத்து செய்யும் அல்லது குறைக்கும் அபாயம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் ஆங்கில ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில், தற்போது தங்களிடம் உள்ள எரிபொருளை கவனமாக நிர்வகிக்க வேண்டிய பொறுப்பு இலங்கையின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்திடம் உள்ளது என சுட்டிக்கப்பட்டுள்ளது.
விமானங்கள் எரிபொருளை சுமந்து செல்லும் நிலை ஏற்படலாம்
சில விமானங்கள் இலங்கையில் உள்ள விமான நிலையங்களில் எரிபொருளை நிரப்புகின்றன. எனினும் இலங்கையில் தொடரும் சிக்கல் நிலைமைகள் காரணமாக எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டால், குறித்த விமானங்கள் இலங்கைக்கு வரும் போது எரிபொருள் நிரப்பும் நோக்கங்களுக்காக தம்முடன் எரிபொருளை எடுத்து வர வேண்டிய நிலைமை ஏற்படும்.
எனினும் அது அவர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துவதாக அமையும், ஏனெனில் விமானங்கள் தங்களுடைய சொந்த எரிபொருளைச் சுமந்து கொண்டு பறந்தால், சரக்குகளின் எடையையும், பயணிகளின் எண்ணிக்கையும் குறைக்க வேண்டிய நிலை ஏற்படும். இந்த விடயம் விமான நிறுவனங்களுக்கு மிகப் பெரிய தாக்கத்தை செலுத்தும் என விமானப் போக்குவரத்துத் துறை சார்ந்த தகவல் வட்டாரங்கள் தெரிவிப்பதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எரிபொருளுக்காக வேறு நாடுகளுக்கு விமானங்கள் செல்லும் நிலை
இதேவேளை இலங்கையில் போதியளவு எரிபொருள் இல்லாத பட்சத்தில் எரிபொருளை மீள் நிரப்புவதற்காக விமானங்கள் வேறு நாடுகளுக்கு சென்றாலும் கூட அது விமான நிறுவனங்களுக்கு கூடுதல் செலவினை ஏற்படுத்தும் என்பதால் விமான நிறுவனங்கள் இலங்கைக்கான விமானங்களை ரத்து செய்வதற்கோ அல்லது குறைப்பதற்கோ வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர் என மற்றுமொரு ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நிலையில் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இலங்கையில் கட்டுநாயக்க விமான நிலையம் உட்பட அனைத்து விமான நிலையங்களும் இம்மாதம் 31ஆம் திகதிக்கு பின்னர் மூடப்படும் அபாயம் காணப்படுவதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இம்மாதம் 31ஆம் திகதி வரை மாத்திரமே விமானங்களுக்கான எரிபொருள் இருப்பதாக விமான நிலைய மற்றும் விமான போக்குவரத்து நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியாகியிருந்தது.
அத்துடன், எரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கையில் தரையிறக்கப்பட்ட பல விமானங்கள் எரிபொருள் நிரப்புவதற்காக ஏற்கனவே சென்னைக்கு திரும்பியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும் விமான நிலையங்கள் மூடப்படுதல் மற்றும் சர்வதேச விமானங்கள் இரத்துச் செய்யப்படுதல் அல்லது குறைக்கப்படுதல் தொடர்பில் எவ்வித உத்தியோகபூர்வ அறிவிப்புக்களோ அல்லது தகவல்களோ வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இம்மாத இறுதியுடன் கட்டுநாயக்க உட்பட நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் அபாயம்! |