கொழும்பு - அபுதாபி இடையில் குறைந்த கட்டண விமான சேவை!
இலங்கையின் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அபுதாபி விமான நிலையத்திற்கும் இடையில் குறைந்த விமான கட்டண சேவையை ஆரம்பிக்க இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
குறித்த வெளிநாட்டு விமானச் சேவையை செயற்படுத்துவதற்காக சான்றிதழ் நேற்று (03.08.2023) கட்டுநாயக்கவில் AIR ABUDHABI விமான நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் திறமையான விமானச் செயல்பாடுகளைப் பேணுவதற்கு விமான நிறுவனத்தின் நிறுவன அமைப்பு மற்றும் வேலைத்திட்டம் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டதோடு, அதற்கான பௌதீக வளங்கள், முறையான பயிற்சி, தகுதி மற்றும் அனுபவம் ஆகியவை தொடர்பிலான மதிப்பீடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறைந்த விமான கட்டண சேவை
மேலும், இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் விமான தரைச் செயற்பாட்டுப் பிரிவின் சிவில் விமானப் போக்குவரத்துப் பரிசோதகர்கள், விமானச் செயற்பாடுகளுக்குத் தேவையான பணியாளர்கள், உபகரணங்கள் மற்றும் ஏனைய சேவைகளை வழங்குவதற்கான தொழில்நுட்ப மற்றும் பௌதீகத் திறன் குறித்து தமது கவனத்தை செலுத்தியுள்ளனர்.
இதற்கமைய குறித்த ஏர்லைன்ஸ் நிறுவனம் செப்டம்பர் நடுப்பகுதியில் இருந்து தனது விமான சேவையை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |