ஜப்பான் மற்றும் இலங்கைக்கு இடையில் கார்பன் வளர்ச்சி தொடர்பான கூட்டு கடன் பொறிமுறை உடன்படிக்கை
ஜப்பானும் இலங்கையும் குறைந்த கார்பன் வளர்ச்சி பங்காளித்துவத்திற்கான கூட்டு கடன் பொறிமுறை (JCM) தொடர்பான ஒத்துழைப்பு உடன்படிக்கையில் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் கைச்சாத்திட்டன.
இந்த ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க மற்றும் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இதனையடுத்து, ஜப்பானிய தூதுவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
கார்பன் வளர்ச்சி உடன்படிக்கை
புவி வெப்பமடைவதற்கு காரணமான பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைப்பதற்காக உலகளாவிய ரீதியில் ‘கியோத்தோ’ அமைப்பு நிறுவப்பட்டது. இந்த அமைப்பின் இரண்டாவது பதவிக் காலத்தின் போது (2013-2020) ஜப்பான் அந்த அமைப்பிலிருந்து விலகிக் கொண்டது.
அதனைத்தொடர்ந்து உலகளாவிய பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதில் பங்களிப்புச் செலுத்துவதற்காக 2013 ஆம் ஆண்டளவில் காபன் அளவைக் குறைக்கும் இருதரப்பு கூட்டுப் பொறிமுறையொன்றை ஜப்பான் அறிமுகம் செய்தமை குறிப்பிடத்தக்கது.
சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் ருவன் விஜேவர்தன உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.