அன்று ரத்த வெள்ளத்தில் சண்முகசுந்தரம்! இன்று புதிய அட்வகேட் ஜெனரல் - தந்தை போலவே ஸ்டாலின்
தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக (அட்வகேட் ஜெனரல்) பொறுப்பேற்கிறார் சண்முகசுந்தரம். தமிழக அரசியல் வரலாற்றிலும் திமுகவின் வரலாற்றிலும் 'வக்கீல் சண்முசுகந்தரம்' என்ற பெயர் தியாகத்தின் உச்சமாக போற்றப்படுகிறவர்.
சண்முகசுந்தரம்... 1953-ம் ஆண்டு அக்டோபரில் திருநெல்வேலியில் பிறந்தார். அவரது தந்தையார் எஸ். ராஜகோபால், அரசு வழக்கறிஞராக பணியாற்றியவர்.
மதுரையில் சிபிஐ-ன் சிறப்பு வழக்கறிஞராகவும் பணிபுரிந்தவர். திராவிடர் இயக்கத்தின் மீது தீராப் பற்று கொண்டவர். தந்தையைப் போலவே சட்டம் படித்து அரசு வழக்கறிஞராக உயர்ந்தவர் சண்முகசுந்தரம்.
ராஜீவ் கொலை தொடர்பான ஜெயின் கமிஷன் விசாரணை ஆணையத்திலும் ஆஜராகி வாதிட்டவர்.. 1995-ம் ஆண்டில் இருந்துதான் வக்கீல் சண்முகசுந்தரம் என்கிற பெயரை உலகம் அறிந்தது.
ஆம்.. அப்படி என்ன வக்கீல் சண்முகசுந்தரம் செய்தார்? 2011-ம் ஆண்டு சண்முகசுந்தரத்தின் மகன் மனுராஜ் திருமண நிகழ்வில் பங்கேற்ற மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பேசுகையில் அவரது அளப்பரிய தியாகத்தை பட்டியலிட்டுக் காட்டினார்.
அந்த நிகழ்வில் கருணாநிதி பேசியதாவது: சண்முகசுந்தரம் பற்றி, அவருடைய குடும்பம் பற்றி, அவருடைய தந்தையாரைப் பற்றி நெஞ்சுக்கு நீதி நான்காவது பாகத்தில் எழுதி இருக்கிறேன்.
டான்சி நிலத்தை ஜெயலலிதா வாங்கியது தொடர்பாக வழக்கு நடத்த ஆவணங்களைத் தயாரித்து கொண்டிருந்த சண்முகசுந்தரம், 30-5-1995 அன்று இரவு அதிமுக குண்டர்களால் பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டு குற்றுயிரும் குலை உயிருமாக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.
அந்த வழக்கு பற்றி ஆலந்தூர் பாரதி அன்று மாலையில்தான் சண்முகசுந்தரம் அலுவகத்துக்கு வந்து விசாரித்துவிட்டு சென்ற பிறகு இந்த குண்டர்கள் அங்கே வந்து யார்
மேலடா கேஸ் போடற என்று கேட்டவாரே சண்முகசுந்தரத்தை தாக்கி இருக்கிறார்கள். அன்று சண்முகசுந்தரம் சிந்திய ரத்தத்துக்கு திமுக காட்டிய நன்றி கடனாகத்தான் அரசு வழக்கறிஞராக, ராஜ்யசபா எம்பியாக வாய்ப்பைப் பெற்றார்.
அத்துடன் சண்முகசுந்தரம் தாக்கப்பட்டது தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் விசாரித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. அதனால்தான் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர்.
50க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டுக் காயங்கள், நானும் என்னுடைய தம்பிமார்கள் சென்று மருத்துவமனையில் சண்முகசுந்தரத்தைப் பார்த்த போது ரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தார்...
அவருடைய விரல்கள் துண்டிக்கப்பட்டு கிடந்தன. ஆனால் அதற்குப் பிறகு சண்முகசுந்தரம் அஞ்சி நடுங்கிவிட்டாரா? பதுங்கிவிட்டாரா? தன் ஆற்றலை வெளிப்படுத்த தவறவிட்டாரா என்றால் இல்லை என குறிப்பிட்டார்.
அதேபோல் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு! தொடரில் வக்கீல் சண்முகசுந்தரம் தாக்கப்பட்டதை பற்றி அப்படி எழுதி இருக்கிறார். ஜெயலலிதாவின் ஊழலை எதிர்த்ததால் தாக்கப்பட்ட வழக்கறிஞர்களில் முக்கியமானவர் சண்முகசுந்தரம்.
அரசுக்கு சொந்தமான டான்சி நிலத்தை ஜெயலலிதாவும், சசிகலாவும் இணைந்து ஜெயா பப்ளிகேஷன்ஸ், சசி எண்டர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்களுக்காக வாங்கினார்கள். அதை எதிர்த்து இந்திய தண்டனை சட்டத்தின் 169-ஆவது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய திமுக முடிவு செய்கிறது. திமுகவின் வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் ஆலந்தூர் பாரதி பெயரில் வழக்குப் பதிவு செய்ய சண்முகசுந்தரம் மனுவைத் தயாரித்து வந்தார்.
இதற்காக அவர்கள் இருவரும் ஒரு மாதத்திற்கும் மேலாக நேரிலும், தொலைபேசியிலும் ஆலோசனை நடத்தி வந்தனர். அந்த காலக் கட்டத்தில் தமக்கு தொலைபேசி மூலம் மிரட்டல்கள் வருவதாக பாரதியிடம் சண்முகசுந்தரம் கூறி வந்தார்.
1995-ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படவிருந்தது. அதற்கு முதல் நாள் மே 30-ஆம் தேதி இருவரும் கீழ்ப்பாக்கத்தில் உள்ள சண்முகசுந்தரத்தின் வீட்டில் சந்தித்து பேசினர். அதன்பின் பாரதி அவரது வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றார்.
அப்போது பிரபல ரவுடி வெல்டிங் குமார் தலைமையில் வந்த கும்பல் அவரை சரமாரியாக தாக்கியது. இரும்பு கம்பிகள் மற்றும் உருட்டுக்கட்டைகளால் தாக்கப்பட்டதுடன், அரிவாள்களாலும் வெட்டப்பட்டார்.
இதில் சண்முகசுந்தரத்தின் கை, கால்களில் பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. கைகளில் ஆழமான அரிவாள் வெட்டு விழுந்தது. இடது கையின் சுண்டு விரல் வெட்டித் துண்டிக்கப்பட்டது.
பல வாரங்கள் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிய இவர், மருத்துவர்களின் தொடர் சிகிச்சையால் உயிர் பிழைத்தார். சண்முகசுந்தரம் தாக்கப்பட்டதைக் கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் தொடந்து 3 வாரங்களுக்கு போராட்டங்களை நடத்தினர்.
அப்போது சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்திற்கு மூத்த வழக்கறிஞர்கள் காந்தி, பால்பாண்டியன் ஆகியோர் தலைமையேற்றனர்.
இவ்வழக்கில் குற்றஞ்சாற்றப்பட்ட 7 பேரில் 6 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பதிவு செய்துள்ளார்.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி குறிப்பிட்டது போல அன்று சண்முகசுந்தரம் செய்த அளப்பரிய தியாகத்துக்கான நன்றி கடனை இன்னமும் திமுக செய்து கொண்டிருக்கிறது.
இதனால்தான் இப்போது தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரத்தை தந்தை கருணாநிதி போலவே முதல்வர் ஸ்டாலின் நியமித்து நன்றி பாராட்டி இருக்கிறார்.