குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்குவது தொடர்பில் ஆலோசனை
நீதிமன்றினால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவது தொடர்பிலான வழிகாட்டுதல்களை உருவாக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறான வழிகாட்டுதல் கோவை ஒன்றை வெளியிடுவது கட்டாயமாக்கப்பட வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ரோயல் பார்க் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் ஷ்ரமந்த ஜயமஹவை விடுதலை செய்வதற்கான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்தை இரத்து செய்யக் கோரி இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் பெண்கள் ஊடக அமைப்புகளால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு, நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
விவாதம் செய்ய முடியாது
எஸ்.துரைராஜா, யசந்த கோதாகொட மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் குறித்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. அதன் போது ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மேற்கண்டவாறான வழிகாட்டல் கோவை ஒன்றின் உருவாக்கம் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
அங்கு ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கு அரசியலமைப்பின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் தொடர்பில் விவாதம் செய்ய முடியாது என்பதை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
எவ்வாறாயினும், தற்போதுள்ள சட்ட விதிகளுக்கு அமைவாக அதிகாரம் பயன்படுத்தப்பட வேண்டுமென குறிப்பிட்ட சாலிய பீரிஸ், ஜனாதிபதிகள் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் ஏற்படக்கூடிய ஏற்றத்தாழ்வுகளைத் தவிர்ப்பதற்கு தொடர்ச்சியான வழிகாட்டுதல்களை வெளியிடுமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.
நீதியமைச்சிடம் கோரிக்கை
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில் முன்னிலையான ஜனாதிபதியின் சட்டத்தரணி பைசர் முஸ்தபா, இதன்போது தனது வாதங்களை நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவது தொடர்பில் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கோப்பு தொடர்பில் வினவிய போது, அது ஜனாதிபதி அலுவலகத்தில் இல்லை என அலுவலகம் தனது கட்சிக்காரருக்கு அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கோப்பு தொடர்பான தகவல்களை வழங்குமாறு தகவல் அறியும் சட்டத்தின் கீழ் நீதியமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்னர் மேலதிக மனுக்கள் மீதான விசாரணை ஜூலை 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டதுடன், அன்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில் ஜனாதிபதியின் சட்டத்தரணி பைசர் முஸ்தபா மேலதிக விடயங்களை முன்வைக்கவுள்ளார்.
நீதிமன்றில் கருத்து
இதேவேளை, குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு தாம் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை என தென் மாகாண கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் ரமோன் விக்ரமசிங்க மற்றும் பலாங்கொட புத்தகோச தேரர் ஆகியோர் தமது சட்டத்தரணிகள் ஊடாக உச்ச நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர்.
ஜூட் ஷ்ரமந்த ஜயமஹ என்ற குற்றவாளியை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு மேற்குறித்த மதத்தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்திருந்தமை தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஷமில் பெரேரா கடந்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்றில் கருத்து வௌியிட்டிருந்தார்.
ஆனால் அவ்வாறான கோரிக்கையை அப்போதைய ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கவில்லை என ஆயர் ரமோன் விக்கிரமசிங்க மற்றும் பலாங்கொடை புத்தகோச தேரர் ஆகியோர் தமது சட்டத்தரணி ஊடாக உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |