சமகால அரசாங்கம் மது உற்பத்தி அனுமதிப்பத்திரங்களை உறவினர்களுக்கு வழங்குவதாக குற்றச்சாட்டு
நடப்பு அரசாங்கம் தமது உற்றார் உறவினர்களுக்கு நான்கு புதிய மது உற்பத்தி அனுமதிப் பத்திரங்களை வழங்கவுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துநில அமரசேன இந்தக்குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார்.
இது பிரதமர் மகிந்த ராஜபக்சவின் “மத்தட தித்த” என்ற போதைப்பொருட்களைக் கட்டுப்படுத்தும் திட்டத்துக்கு முரணானது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மதுபானங்களை பாரியளவில் உற்பத்தி செய்வதற்காக இந்த 4 அனுமதிகளும் வழங்கப்படவுள்ளன.
இதில் இரண்டு அனுமதிகள் அதிக செறிவைக்கொண்ட மதுபான உற்பத்திக்கானது. ஏனைய இரண்டும் பியர் உற்பத்திக்கானது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நான்கு அனுமதிப்பத்திரங்களும் நிதியமைச்சரான பிரதமர் மகிந்த ராஜபக்சவின் அனுமதிக்காக தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துநில அமரசேன தெரிவித்துள்ளார்.
இதேவேளை அதிக செறிவைக்கொண்ட மதுபான உற்பத்தி மையத்தின் ஆலை ஒன்று விரைவில் பாசிக்குடாவில் நிறுவப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே இந்தக்குற்றச்சாட்டை ஜேவிபி நாடாளுமன்றத்தில் சுமத்தியபோது ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் இது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும் என்ற உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.