கடமையிலிருந்து விலகிய இ.போ.ச பணியாளர்கள்!
இலங்கை போக்குவரத்து சபை பணியாளர்கள் இன்று (8) நண்பகல் முதல் கடமையிலிருந்து விலகியுள்ளனர்.
போக்குவரத்து சேவைக்கு எரிபொருள் வழங்கப்படாவிட்டால், இன்று நண்பகல் முதல் கடமைக்கு செல்லப்போவதில்லை என அகில இலங்கை போக்குவரத்து சேவையாளர் சங்கத்தின் தலைவர் சேபால லியனகே எச்சரிக்கையை விடுத்திருந்தார்.
பெட்ரோல் தட்டுப்பாடு
பெட்ரோல் தட்டுப்பாடு காரணமாக, இலங்கை போக்குவரத்து சபையில் பணியாற்றும் ஊழியர்கள், சேவைக்கு சமுகமளிக்க முடியாதுள்ளது. அத்துடன், சேவை நிறைவடைந்து மீள வீடு திரும்பவும் முடியாத நிலை காணப்படுகிறது.
பல மாதங்களுக்கு முன்பே இந்த விடயம் தொடர்பில், அதிகாரிகளுக்கும் போக்குவரத்து அமைச்சருக்கும் அறிவிக்கப்பட்டபோதிலும், எந்தவித சாதகமான பதிலும் கிடைக்கவில்லை என இ.போ.ச தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.
கடமையிலிருந்து விலகல்
இதனடிப்படையிலே, இலங்கை போக்குவரத்து சபை பணியாளர்கள் கடமையிலிருந்து இன்று விலகியுள்ளனர்.
இதேவேளை தமது கோரிக்கை தொடர்பில், போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவுடன் பேச்சுவார்த்தை ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.