யாழ் நகரில் வீதிக்குறியீடுகள் இல்லாத வீதி: மாற்றம் ஏற்படுமா..!
யாழ்ப்பாணத்தில் உள்ள அதிக மக்கள் நடமாட்டம் கொண்ட வீதியாக ஸ்ரான்லி வீதி அமைந்துள்ளது.
அரிய குளம் சந்தியில் இருந்து காங்கேசன்துறை வீதிவரை நீண்டு செல்லும் இந்த வீதியின் பயன்பாட்டை இலகுவாக்குவதற்காக ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் தொடர்பில் மக்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
யாழ்ப்பாணத்தின் உள்ள பல வீதிகளிலும் மக்கள் நடமாட்டம் அதிகமாகவும் செறிவாகவும் இருக்கும் வீதியாகவும் வர்த்தக நோக்கில் அதிக மக்கள் நடமாட்டத்தைக் கொண்ட வீதியாக ஸ்ரான்லி வீதி அமைந்துள்ளது.
வீதிக்குறியீடுகள் அழிந்துள்ள நிலையில் வீதியின் அகலமும் போதாதிருப்பதாக அவ்வீதி வழி பயணப்படும் மக்களில் பலரும் தங்கள் எதிர் பார்ப்புக்களை குறிப்பிட்டு பேசியிருக்கின்றனர்.
வீதிக் குறியீடுகள்
வீதியில் உள்ள வீதிக் குறியீடுகள் இரு வகைப்படுத்தப்பட்டு நோக்கப்படும். ஒன்று வீதியின் மீது வரையப்பட்டு பயணத்தை நெறிப்படுத்தும் குறியீடுகள், மற்றையது வீதியின் ஓரத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ள குறியீட்டுக்காட்டிகளில் உள்ள குறியீடுகள் என இருவகைப்படுத்தப்படும்.
விபத்துக்களை குறைத்து வாகனங்களின் பயணத்தை இலகுபடுத்தவே வீதிக்குறியீடுகள் பயன்படுகின்றன.
ஸ்ரான்லி வீதியில் வீதியின் மீது வரையப்படும் வீதிக்குறியீடுகள் அழிந்து காணப்படுகிறன.வரும் வாகனங்களும் போகும் வாகனங்களும் என சாரதிகளே தங்களுக்கான இடங்களை எடுத்து பயணிப்பதை அவதானிக்கலாம்.
இடையிடை ஏற்பாடும் தடங்கல்களை அவர்களாகவே பெரும் சிரமங்களுக்கு மத்தியில் எதிர்கொண்டு பயணிக்கும் துர்ப்பாக்கிய நிலை இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
வீதியின் அகலம்
ஸ்ரான்லி வீதியின் இரு பக்கங்களிலும் வர்த்தக நிலையங்கள் அமைந்துள்ளன. வாகனங்களும் மற்றும் பாதசாரிகளும் பயன்படுத்தி வரும் இந்த வீதியின் அகலம் போதாததும் ஒரு குறையாக மக்களால் குறிப்பிடப்படுகின்றது.
எனினும் அதனை உடனடியாக மாற்றியமைக்க முடியாது.ஆயினும் வீதிக்குறியீடுகளை ஏற்படுத்தி பயணத்திற்கு உதவ முடியும் என்பது மாணவர்கள் சிலரின் கருத்தாக இருப்பதும் நோக்கத்தக்கது.
யாழ்.மதிய பேருந்து நிலையத்தில் இருந்து பலாலி வீதி மற்றும் பருத்துறை வீதி வழியே பயணிக்கும் பயணிகள் பேரூந்துகளின் போதல் மற்றும் வருதல் வழித்தடங்களில் ஆரம்ப இறுதி பாதையாக ஸ்ரான்லி வீதி இருப்பதாகவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.
பேருந்துகள் மற்றும் பாரவூர்திகள் உள்ளடங்கிய வாகனங்களும் பாதசாரிகளும் என ஒரே நேரத்தில் அதிகளவான மக்கள் பயன்படுத்தி வருவதால் பாதையின் அகலம் போதாது என்பதை இலகுவாக புரிந்து கொள்ள முடியும் என வர்த்தகர் ஒருவருடன் மேற்கொண்ட உரையாடலின் போது அவர் தன் கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
பாதசாரிகள் கடவை கோடுகள்
வீதியின் அகலத்தை அதிகரிப்பது தற்போதைக்கு நடைமுறைச் சாத்தியமற்றதாகும். வீதியின் அகலத்தை இரு பக்கங்களினாலும் சற்று அதிகரிக்க முயற்சிக்கலாம் என்று கருத்தினை துறைசார் அதிகாரிகள் சிலரிடம் முன் வைத்த கருத்துக்கள் கேட்கப்பட்டது.
அதற்கான சாத்தியப்பாடுகள் பற்றி இருபக்கங்களிலும் உள்ள வர்த்தகர்களின் கருத்துக்களை பெற்றுக் கொண்டு செயற்பாடுகளை திட்டமிடும் போது ஒரு சிறிய மாற்றத்தினை ஏற்படுத்த முடியும் எனவும் அதனால் அப்பாதையின் அகலத்தில் சற்று அதிகரிப்பு ஏற்படும் எனவும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
ஸ்ரான்லி வீதியை குறுக்கறுக்கும் தொடருந்து பாதையில் இருந்து கஸ்தூரியார் வீதியின் ஆரம்பம் வரை இரு நாற்சந்திகளையும் இரண்டிற்கு மேற்பட்ட முச்சந்திகளையும் கொண்டுள்ளது.
வீதியின் எல்லைகள் மற்றும் நடுக்கோடு பாதசாரிகள் கடவை கோடுகளை இடும் போது ஸ்ரான்லி வீதி அழகில் மெருகூட்டப்பட்டதாக அமையும்.அந்தப் பகுதியின் காட்சியும் மாற்றம் பெறும் என ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பில் சமூக ஆர்வலர்கள் சிலர் தங்களின் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார்கள்.
யாழ் நகரின் அழகிய தோற்றத்திற்கு வீதிகளின் புதுப்பொலிவும் துணை செய்யும் என்பதால் ஸ்ரான்லி வீதியில் பொருத்தப்பாடான சாத்தியப்படக்கூடிய உடனடி மாற்றங்களை ஏற்படுத்த உரிய தரப்பினர் முனைப்பும் காட்ட வேண்டும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |