இலங்கையில் நபர் ஒருவர் வாழ்வதற்கு மாதத்திற்கு 12,444 ரூபா தேவை
இலங்கையில் ஒருவருக்கு தமது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு குறைந்தபட்ச மாதாந்தச் செலவு 12,444 ரூபாவாகும் என மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஜூன் 2022 மாதத்துடன் தொடர்புடைய திணைக்களத்தால் வெளியிடப்பட்ட சமீபத்திய அதிகாரபூர்வ வறுமைக் கோடு விளக்கப்படத்தின் மூலம் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பெறுமதி ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஏற்ப தனித்தனியாக கணக்கிடப்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் வசிக்கும் ஒருவருக்கு தனது அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு மாதாந்தம் 13421 ரூபா தேவைப்படுவதாக கூறப்படுகின்றது.
மொனராகலை மாவட்டம் குறைந்த பட்சமாக குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அந்த மாவட்டத்தில் வாழும் ஒருவர் தமது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஒரு மாதத்தில் மேற்கொள்ள வேண்டிய குறைந்தபட்ச செலவு 11,899 ரூபாவாகும்.
உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டின் அதிகரிப்புக்கான காரணம் 2022 ஜூன் மாதத்தில் முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் அதிக தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
எவ்வாறாயினும், கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, ஜூலை 2022 இல், இலங்கையில் பணவீக்கம் 60.85% ஆகவும் உணவுப் பணவீக்கம் 90.9 வீதம் ஆக உயர்ந்துள்ளது.