இலங்கையரை தொடர்ந்து மற்றுமொருவருக்கு நேர்ந்த நிலை! - கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட கொடூரம்
இலங்கையர் ஒருவர் கடந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் பாகிஸ்தானில் கொடூரமாக தாக்கப்பட்டு உயிருடன் எரித்துகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது மற்றுமொருவர் கட்டிவைத்து கல்லால் அடித்துகொல்லப்பட்ட சம்பவம் ஒன்று பாகிஸ்தானில் பதிவாகியுள்ளது.
மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். குறித்த நபர் குரான் நூலின் பக்கங்களை கிழித்து, தீ வைத்து எரித்து விட்டதாக கூறப்படுகின்றது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது ஜங்கல் டேரா கிராமத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
41 வயதான முஸ்டாக் அகமது என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். முஸ்டாக் அகமது நான் குரானை எரிக்கவே இல்லை. நான் நிரபராதி என்று கதறி அழுதுள்ளார். எனினும் யாருமே அவர் பேச்சை கேட்கவில்லை. இதில் அகமது சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
அவரை படுகொலை செய்ததோடு, அவரின் சடலத்தையும் மரத்தில் கட்டி தொங்கவிட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. அந்த கும்பல் கல்லாலேயே அகமதுவை தாக்கியபோது பொலிஸார் சிலர் அங்கு இருந்து உள்ளனர்.
ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இறுதியில் கும்பலின் முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். ஆனாலும் அந்த கும்பல் விரைந்து வந்து, போலீசாரிடம் இருந்து அந்த நபரை விடுவித்து, இழுத்து சென்றுவிட்டது.
அகமதுவின் சடலத்தை மரத்தில் இருந்து கீழே இறக்க பொலிஸார் முயன்றுள்ளனர். அவர்களையும் அந்த கும்பல் கற்களை வீசி தாக்கி உள்ளது. இந்த பயங்கரமான சம்பவத்துக்கு அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் கவலை தெரிவித்துள்ளார்.
சட்டத்தை பொதுமக்கள் கையில் எடுத்துக் கொள்வதை தன்னுடைய அரசு ஒருபோதும் சகித்துக் கொள்ளாது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கமாறு பொலிஸ் அதிகாரிகளுக்கு இம்ரான் கான் உத்தரவிட்டுள்ளார்.
உயிருடன் எரித்துகொல்லப்பட்ட பிரியந்த குமார
இதேவேளை, பாகிஸ்தானின் சியால்கோட்டில் இலங்கையர் ஒருவர் கடந்த ஆண்டின் இறுதி பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தார்.
சியால்கோட்டில் உள்ள வசிராபாத் வீதியில் அமைந்துள்ள, தனியார் தொழிற்சாலை ஒன்றில் மேலாளராக பணிபுரிந்த பிரியந்த குமார, ஏனைய ஊழியர்களினால் இவ்வாறு சித்திரவதைக்கு உள்ளாகி எரியூட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் மதத்தை இழிவுப்படுத்தும் வகையில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரை கிழித்துவிட்டதாக கூறப்பட்டது.
இதனால், 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து, பிரியந்தா குமாராவை சரமாரியாக தாக்கினர்.
பிரியந்தா குமாராவை வீதிக்கு இழுத்து வந்து, தீவைத்து உயிருடன் எரித்து கொலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.