நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட சட்டமூலம்
பெற்றோலியப் பொருட்கள் விசேட ஏற்பாடுகள் திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சட்டமூலத்திற்கு ஆதரவாக 77 வாக்குகளும், எதிராக 17 வாக்குகளும் கிடைத்துள்ளன.
இதேவேளை 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைப்பதற்கான முதல் படியாக அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களுக்கான முன்கூட்டிய ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இலங்கை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
சமர்ப்பிக்கப்படவுள்ள ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் கீழ், கடன் சேவைச் செலவுகளை உள்ளடக்கிய 613 பில்லியன் ரூபா நிதி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சு
பாதுகாப்பு அமைச்சுக்கு 410 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில், இராணுவத்திற்கு 209 பில்லியன் ரூபாவும், கடற்படைக்கு 75 பில்லியன் ரூபாவும், விமானப்படைக்கு 66 பில்லியன் ரூபாவும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் ஆரம்பிக்கப்பட்ட பல்செயல் படைக்கு 9.8 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சுக்கு 129 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன் இதில் 116 பில்லியன் பொலிஸாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கும் , இராணுவத்தினரி்ன் அதிகாரம் கொண்ட பொலிஸாருக்கும் 539 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சு 322 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு
கல்வி அமைச்சுக்கு 232 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியில் மாகாண கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான பணம் உள்ளதா என்பது தெளிவாக இல்லை.
பொதுநிர்வாக அமைச்சு 856 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது அதில் 353 பில்லியன் ஓய்வூதியத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சுக்கு 372 பில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது.