எங்களது ஆலோசனையை கேட்டிருந்தால் 90 வீதமான மரணங்களை தவிர்த்திருக்கலாம்!
தங்களது ஆலோசனையை அரசாங்கம் கேட்டிருந்தால் 90 வீதமான கோவிட் மரணங்களை தவிர்த்திருக்கலாம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
19.5 மில்லியன் கோவிட் தடுப்பூசி மாத்திரைகள் கிடைக்கப் பெற்றிருந்தாலும் மரணங்களை வரையறுத்துக்கொள்ள முடியவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது.
முன்னுரிமை அடிப்படையில் திட்டமிட்ட வகையில் தடுப்பூசி ஏற்றப்படாமையே இதற்கான காரணம் என சங்கத்தின் செயலாளர் டொக்டர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையானது முன்னுரிமை மற்றும் உரிய திட்டமிடல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டியது அவசியமானது என அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கிய போதிலும் அதனை செவிமடுக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மரண எண்ணிக்கை அதிகரிப்பிற்கான பொறுப்பினை ஆலோசனை ஏற்றுக்கொள்ளாத தரப்பினர் ஏற்றுக் கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.
60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் மற்றும் தொற்றா நோய்களினால் பீடிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டிருக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த நடைமுறை எந்த சந்தர்ப்பத்திலும் அமுல்படுத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 19.5 மில்லியன் தடுப்பூசிகளில் குறைந்தபட்சம் 10 மில்லியன் தடுப்பூசிகளேனும் உரிய முன்னுரிமை அடிப்படையில் ஏற்றப்பட்டிருந்தால் தவிர்க்கப்பட வேண்டிய மரணங்களை தவிர்த்திருக்கலாம் என டொக்டர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார்.