வங்கிகணக்கு இல்லாததால் பெருந்தொகை பணத்தை இழக்கும் 16,800 பேர்! அனுப்பப்பட்ட அவசர குறுஞ்செய்தி
அஸ்வெசும திட்டத்தின் ஊடாக அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிதி உதவியைப் பெற்றுக்கொள்ள தகுதியுடைய ஆயிரக்கணக்கான குடும்பங்கள், தங்களது தகவல்களைச் சரியான நேரத்தில் புதுப்பிக்கத் தவறியதால் அந்த நன்மைகளை இழக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் நிமால் கொடவலகெதர தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அஸ்வெசும பயனாளிகளின் மீளாய்வு
அஸ்வெசும பயனாளிகளின் மீளாய்வுக்காக தகவல்களைப் புதுப்பிக்கும் பணி 2025 நவம்பர் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. எவ்வாறிருப்பினும் சுமார் 85,000 பயனாளிகள் இதுவரை தங்களது தகவல்களைப் புதுப்பிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் வருடாந்த மீளாய்வுக்காகத் தங்களது தகவல்களைச் சரியான நேரத்தில் புதுப்பிக்கத் தவறியதன் காரணமாக, 'அஸ்வெசும' நலன்புரித் திட்டத்தின் கீழ் ஏழை மற்றும் மிக ஏழை என வகைப்படுத்தப்பட்ட 85,000க்கும் மேற்பட்ட நபர்கள் தங்களது நன்மைகளை இழக்கும் நிலையில் உள்ளனர்.
இருப்பினும், இதுவரை ஏழை பிரிவைச் சேர்ந்த 56,547 பயனாளிகளும், மிக ஏழை பிரிவைச் சேர்ந்த 28,608 பயனாளிகளும் இச்செயல்முறையைப் பூர்த்தி செய்யத் தவறியுள்ளனர்.
பொதுமக்கள் தங்களது தகவல்களை இணையவழியூடாகவோ அல்லது பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை அருகிலுள்ள பிரதேச செயலகத்தில் ஒப்படைப்பதன் மூலமோ புதுப்பித்துக்கொள்ள முடியும்.
மேலும் இணையவழியூடாக தகவல்களைப் புதுப்பிப்பதை எளிதாக்க தனியார் தகவல் தொடர்பு மையங்களுக்கு சிறப்பு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
வங்கி கணக்கு இல்லாதவர்களின் விபரம்
இதற்கிடையில், தகுதி வாய்ந்த 16,800 விண்ணப்பதாரர்கள் வங்கி கணக்கு இல்லாத காரணத்தினால் நன்மைகளைப் பெறாமலுள்ளனர். இவர்களில் 8900 பேர் ஏழை பிரிவிலும், 4400 பேர் மிக ஏழை பிரிவிலும் அடங்குகின்றனர்.

வங்கி கணக்கு இல்லாதவர்களின் அதிகப்படியான எண்ணிக்கை நுவரெலியா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளது. பயனாளிகள் வங்கி கணக்கை ஆரம்பிக்காமைக்கான காரணம் அவர்களிடம் தேசிய அடையாள அட்டை இன்மையாகும்.
பயனாளிகளைத் தெரிவு செய்து அந்தப் பட்டியலை வெளியிட்டதும், அவர்கள் நிதியைப் பெறுவதற்கு வங்கி கணக்கைத் திறக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பிரதேச செயலகம் பயனாளிகளுக்கு ஒரு கடிதத்தை வழங்கும். அவர்கள் அந்த கடிதத்துடன் வங்கிக்குச் சென்று தெரிவு செய்யப்பட்ட அரச வங்கிகளில் 'அஸ்வெசும' கணக்காக (பூச்சிய மீதி கணக்கு - Zero-balance account) அதனைத் திறக்க வேண்டும்.
ஆரம்பத்தில் சுமார் ஒரு இலட்சம் பயனாளிகள் வங்கி கணக்கு இன்றி இருந்தனர். எனினும் தற்போது அந்த எண்ணிக்கையை குறைத்துள்ளோம்.
ஆனால் இன்னும் கணக்கு இல்லாதவர்கள் அல்லது தாம் இந்த நன்மையைப் பெற தகுதி பெற்றுள்ளோம் என்பதை அறியாதுள்ளனர். அவர்களுக்கு நாம் கடிதங்கள், குறுஞ்செய்திகள் அனுப்பியுள்ளோம், ஆனால் செய்தி அவர்களைச் சென்றடையவில்லை என்றார்.