2025 ஆம் ஆண்டு லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் 84 பேர் கைது: அதிகமானோர் பொலிஸார்
2025 ஆம் ஆண்டில் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் மொத்தமாக 84 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2025 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட 130 திடீர் சோதனைகளின் போது இந்த கைது நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
இதில் பொலிஸ் உத்தியோகத்தர்களே அதிக எண்ணிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

13 பொலிஸ் சார்ஜன்ட்கள், 09 பொலிஸ் கான்ஸ்டபிள்கள், 04 துணை பரிசோதகர்கள் , 02 பிரதம பரிசோதகர்கள் என்போர் அடங்குவதாக லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நீதியமைச்சின் கீழ் செயல்படும் நிறுவனங்களைச் சேர்ந்த 11 பேர், விவசாய மற்றும் பொது சேவைகள் துறையைச் சேர்ந்த 5 அதிகாரிகள், 3 கிராம சேவகர்கள், 3 பிரதேச சபை அதிகாரிகள் லஞ்சம் தொடர்பான குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், திடீர் சோதனைகளைத் தவிர்த்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மேலும் 56 பேர் 2025 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த பட்டியலில், முன்னாள் அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள், துறைத் தலைவர்கள், மருத்துவர்கள், முன்னாள் பிரதேச சபைத் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு அரச அதிகாரிகள் அடங்குவதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், 2025 ஆம் ஆண்டில் 153 பேருக்கு எதிராக 115 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், 69 வழக்குகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதேபோல், 2025 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை 8,409 முறைப்பாடுகள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளன. அவற்றில் 569 முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.