மத்திய வங்கியிலிருந்து 808 மில்லியன் டொலர்கள் மாயம்..!
இலங்கை மத்திய வங்கி வழியாக 800 மில்லியன் டொலருக்கும் அதிகமான தொகை நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) சமர்ப்பித்த அறிக்கையின்படி தெரிய வந்துள்ளதாக தயாசிறி ஜயசேகர எம்.பி. தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (05) நடைபெற்ற ஒரு விசேட ஊடக சந்திப்பின்போது முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது,
808 மில்லியன் டொலர்கள்
தற்போதைய அரசாங்கத்தின் கீழ், கடந்த காலங்களில் பல அரச நிறுவனங்களில் இருந்து பணம் கசிந்துள்ளது என்றும், நாட்டை விட்டு கிட்டத்தட்ட ஒரு பில்லியன் டொலர் வெளியேறியிருப்பது ஒரு பெரிய பிரச்சினை என்றும், இந்தத் தொகை பூஜ்ஜியமாகவே இருக்க வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் குறிப்பிடுகின்றது.

அந்த வகையில் இவ்வளவு பெரிய தொகை நாட்டை விட்டு வெளியேறியிருப்பது பெரும் பிரச்சினையாகும். குறிப்பாக, நிதி அமைச்சில் நடந்த 2.5 மில்லியன் டொலர் சம்பவம் குறித்து நிதி அமைச்சின் செயலாளர் தனது வருடாந்த அறிக்கையில்கூட குறிப்பிடவில்லை.
இந்த 808 மில்லியன் டொலர் நிதி வேறுபாடு குறித்து ஒரு சிறப்பு விசாரணை நடத்துமாறு நாடாளுமன்றத்தின் நிதிக் குழுவிடம் கோரிக்கை வைக்க உள்ளேன்.
தற்போதைய அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்து சர்வதேச நாணய நிதியம் சமர்ப்பித்த 143 பக்க அறிக்கையில், அனைத்துப் பரிவர்த்தனைகளும் சரிசெய்யப்படாத பட்சத்தில் நாட்டின் செலுத்து இருப்பு வேறுபாட்டைச் சமன் செய்யப் பயன்படுத்தப்படும் முக்கிய அம்சங்கள் குறித்த ஒரு தனி அறிக்கையும் அடங்கியுள்ளது. அந்த அறிக்கையில் 808 மில்லியன் டொலர் பற்றாக்குறை தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தயாசிறி குற்றச்சாட்டு
இது முந்தைய ஆண்டில் -254 ஆகவும், 2025-ல் -808 ஆகவும், இனிவரும் காலங்களில் பூஜ்ஜியமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தகைய வேறுபாடு இருக்கக்கூடாது என்றும், 2025-ல் உள்ள 808 மில்லியன் டொலர் மத்திய வங்கியை விட்டு எப்படியாவது வெளியேறியதா, ஏதேனும் அழிக்கப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் நடந்ததா என்பதை மத்திய வங்கி நாட்டுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் தாம் கருதுவதாக தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிக்கையில் உள்ள தகவல்களிலிருந்து 808 மில்லியன் டொலர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளது என்பது தெளிவாகிறது. இதுபோன்ற சம்பவங்கள் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் தொடர்ச்சியாக பதிவாகியுள்ளன என்று நிபுணர்கள் கருதுவதாகவும் தயாசிறி ஜயசேகர தொடர்ந்தும் சுட்டிக் காட்டியுள்ளார்.