நாட்டை விட்டு வெளியேறிய மருத்துவர்கள் உட்பட 6000 தொழில்சார் நிபுணர்கள்
பொருளாதார நெருக்கடி காரணமாக மருத்துவர்கள், பொறியியலாளர்கள்,சட்டத்தரணிகள், கணக்காய்வாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உட்பட பல்வேறு உயர் தொழில்களில் ஈடுபட்டு வந்த 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடந்த மூன்று ஆண்டுகளில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார்.
வருமான வரி அறவீடு காரணமாக மேலும் பலர் நாட்டை விட்டு செல்லலாம்
ஊழியர்களின் சம்பளத்தின் அடிப்படையில் அதிகளவில் வரி அறிவிடப்படுவதன் காரணமாக எதிர்காலத்தில் பலர் நாட்டை விட்டு வெளியேறலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே கடந்த வருடத்தில் முதல் 8 மாதங்களில் எட்டு லட்சம் பேர் கடவுச்சீட்டுக்களை பெற்றுள்ளதுடன் அவர்களில் ஆறு லட்சம் பேர் நாட்டை விட்டு சென்றுள்ளனர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு நான்கு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொண்டுள்ளனர். இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைகளுக்கு செல்வது 136 வீதமாக அதிகரித்துள்ளது.
கல்வி கற்பதற்காக கடந்த ஆண்டு மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வெளிநாட்டு பல்லைக்கழகங்களுக்கு சென்றுள்ளனர். இதன் காரணமாக பெரும் தொகை பணத்தை நாடு இழந்துள்ளது.
இவ்வாறு படித்த புத்திஜீவிகள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்வது நாட்டின் எதிர்கால பயணத்திற்கு பெரிய தடையாக அமையும். இதனை தடுக்க அரசாங்கம் துரித்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
நாட்டின் தேசிய நிதியை முதலீடு செய்து இலவச கல்வி மூலம் உருவாகும் தொழில்சார் நிபுணர்களின் நாட்டை கட்டியெழுப்புவதற்கு தேவையான சேவையை பெற்றுக்கொள்ள வேண்டும்.
அவர்கள் நாட்டை விட்டு செல்லும் நிலைமையை ஏற்படுத்தினால், நாட்டின் பொருளாதாரம் மேலும் பாதிப்புக்கு உள்ளாகும். வெளிநாட்டு தொழில் சந்தைக்கு தொழில்சார் நபர்களை தயார்ப்படுத்த வேண்டும் எனவும் காமினி வலேபொட மேலும் கூறியுள்ளார்.