ஆரம்பமானது ஜெனீவா கூட்டத்தொடர் - நெருக்கடிகளை சந்திக்குமா இலங்கை? (நேரலை...)
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது கூட்டத்தொடர் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.
இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 2 மணியளவில் ஜெனீவாவில் இந்த கூட்டத்தொடர் ஆரம்பமானது.
முதலாவது தினத்திலேயே இலங்கை தொடர்பான மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை முன்வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான தீர்மானமானது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரின்போது நிறைவேற்றப்பட்டிருந்தது.
இந்த தீர்மானத்திற்கு அமைவாக இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த வாய்மூல அறிக்கையினை மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பட்ச்லெட் இன்றைய தினம் முன்வைக்கவுள்ளார்.
இதேவேளை, இன்று ஆரம்பமாகியுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடரானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 8ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது.
இந்த நிலையில் இம்முறை ஜெனீவாவில் இலங்கை தொடர்பான விவகாரங்களில் என்ன நடக்கப் போகிறது, இலங்கை நெருக்கடிகளை சந்திக்குமா என்பது தொடர்பில் பல்வேறு தரப்பினரும் பல்வேறுபட்ட கருத்துக்களை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.