வாதரவத்தை படுகொலையின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிப்பு
யாழ்ப்பாணம்(Jaffna) - புத்தூர் வாதரவத்தையில் இந்திய அமைதிப்படையால் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது நேற்று(06.06.2024) மாலை நடைபெற்றுள்ளது.
1989 ஆம் ஆண்டு வாதரவத்தைப் பகுதியில் இந்திய அமைதிப்படையினரால் ஒன்பது பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
நினைவேந்தல் நிகழ்வு
வடக்கு மாகாண சபையின் முன்னாள் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தலைமையில் இறந்தவர்களின் உறவினர்களினால் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, படுகொலை செய்யப்பட்டவர்களின் பிள்ளைகள் மனைவி மற்றும் உறவினர்கள் ஆகியோரால் தீபங்கள் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்வினை தொடர்ந்து கருத்து தெரிவித்த அனந்தி சசிதரன்,
“இந்திய அமைதிப்படை என்ற பெயரில் இலங்கைக்கு வந்த இந்திய இராணுவம் பல்வேறு இடங்களில் பொதுமக்களை படுகொலை செய்திருந்தது.
ஆனால் இவ்வாறான படுகொலைக்கு இன்றுவரையும் இந்திய அரசாங்கம் எவ்வித மன்னிப்பும் கோரவில்லை.
அது தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியும் இல்லை என்பதுடன் தமிழ் மக்களாகிய நாம் இன்றும் ஏதிலிகளாகவே இருந்து வருகிறோம்.
அத்துடன், படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்டு யுத்தத்தின் பின்னர் கடந்த 2012ஆம் ஆண்டளவில் இராணுவத்தினரால் உடைக்கப்பட்ட நினைவு தூபியை விரைவில் அமைத்து அவர்களை நினைவுகூருவதற்கு வழி செய்ய வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |