சுங்கத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் - நீண்ட வரிசையில் காத்திருக்கும் கொள்கலன் பாரவூர்திகள்
கொள்கலன்களை அகற்றுவதில் சுங்கத்தில் ஏற்படும் தாமதம் காரணமாக, பல நாட்களாக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளதாக ஓட்டுநர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
ஒருகொடவத்த மற்றும் தொட்டலங் உள்ளிட்ட வீதிகளின் இருபுறமும் பல நாட்களாக கொள்கலன் பாரவூர்த்திகள் நீண்ட வரிசையில் காணப்படுகின்றன.
கடந்த சில நாட்களாக துறைமுக வளாகத்தில் ஏராளமான கொள்கலன்கள் விடுவிக்கப்படாமல் தேங்கிக் கிடப்பதாக கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொள்கலன்கள்
சுங்கத்துறையிலிருந்து தினமும் 1,800 கொள்கலன்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றாலும், தற்போது சுமார் 700 கொள்கலன்கள் மட்டுமே விடுவிக்கப்படுவதாக கொள்கலன் பாரவூர்தி உரிமையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதன் காரணமாக, தினமும் 500 முதல் 600 வரையிலான கொள்கலன்கள் சிக்கிக் கொள்வதாக குற்றம் சாட்டப்படுகிறது.
சுங்கச் சோதனைகள் தனியார் நிறுவனத்தால் நடத்தப்படுவதே இதற்கு காரணம் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இறக்குமதி செய்யப்படும் கொள்கலன்களில் 60 சதவீதம் ஆய்வு இல்லாமல் விடுவிக்கப்படுகின்றன.
இதனால் ஏற்பட்டுள்ள தாமதத்தைத் தடுப்பது குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கலந்துரையாடல் நடைபெற்றது.
ஜனாதிபதியுடன் சந்திப்பு
இலங்கை சுங்கம், இலங்கை துறைமுக அதிகாரசபை, துறைசார் அமைச்சர்கள் மற்றும் பிரச்சினையை எதிர்கொள்ளும் கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர்கள் மற்றும் துறைமுக சேவைகள் சங்கம் ஆகியோரும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

கடந்த 3 வாரங்களில் நாட்டிற்கு வந்த சுமார் 24 கப்பல்கள் வேறு நாடுகளில் உள்ள துறைமுகங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனினும் கலந்துரையாடலின் பின்னர் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க கருத்து வெளியிடுகையில், சுங்கத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக இரண்டு வாரங்களில் 30 கப்பல்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறினார்.
 
    
     
    
     
    
     
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
 
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        