மட்டக்களப்பில் துப்பாக்கி உள்ளிட்ட பொருட்கள் திருட்டு - 3 பேர் கைது
மட்டக்களப்பு - புனானை வனவிலங்கு காரியாலயத்தை உடைத்து துப்பாக்கி மற்றும் இலத்திரனியல் பொருட்களை திருடிய சம்பவம் தொடர்பாக சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் நேற்று (11.01.2026) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சித்தாண்டியை சேர்ந்த இரு சகோதரர்கள் மற்றும் திருட்டு பொருட்கள் வைத்திருந்த பெண் ஒருவர் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருட்டுச் சம்பவம்
கடந்த 2ஆம் திகதி வாழைச்சேனை - கொழும்பு வீதியின் புனானையில் அமைந்துள்ள பூட்டியிருந்த வனவிலங்கு பாதுகாப்பு காரியாலயத்தின் கதவு உடைக்கப்பட்டு அங்கிருந்த துப்பாக்கி ஒன்று அதற்கான 3 தோட்டாக்கள் மற்றும் சில பொருட்கள் திருடிச் செல்லப்பட்டிருந்தன.
இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார் அந்த பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்டு வந்த சித்தாண்டியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவரை கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் திருடப்பட்ட துப்பாக்கி காட்டு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலிருந்து மீட்கப்பட்டிருந்தது.
விசாரணை
இதனை தொடர்ந்து புனானை பிரதேசத்தில் உள்ள விகாரைக்கு அருகிலுள்ள வீடு ஒன்றில் மறைத்து வைத்திருந்த மின்விசிறி உட்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஒருவர் தலைமறைவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 3 பேரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |