யாழ்ப்பாணத்தில் மேலும் 22 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று உறுதி
யாழ்ப்பாணத்தில் மேலும் 22 பேருக்குக் கோவிட் வைரஸ் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் 8 பேர் இ.போ.ச. காரைநகர் சாலையில் பணியாற்றும் சாரதிகள்,நடத்துநர்கள், காப்பாளர்கள் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 387 பேரின் மாதிரிகள் இன்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இவர்களில் ஒருவருக்கு கோவிட் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதேவேளை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று 382 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.இவர்களில் 21 பேருக்குக் கோவிட் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சிற்றூழியர் ஒருவருக்குக் கோவிட் தொற்று கண்டறியப்பட்டது. இவர் ஏற்கனவே சுயதனிமைப்படுத்தப்பட்டவர்.
யாழ். மாநகர பொதுச் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கார்கில்ஸ் கட்டடத்தொகுதியில் பாதுகாப்பு உத்தியோகத்தராகக் கடமையாற்றும் ஒருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதேவேளை, இ.போ.ச. காரைநகர் சாலையைச் சேர்ந்த 90 பேரிடம் பி.சி.ஆர். பரிசோதனை இன்று முன்னெடுக்கப்பட்டது.இவர்களில் 8 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் சாரதிகள் மூவர், நடத்துநர்கள் மூவர் மற்றும் காப்பாளர்கள் இருவர் அடங்குகின்றனர்.
ஊர்காவற்றுறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 9 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டது. இவர்கள் ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனை தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள்.
இதேவேளை, உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவருக்குக் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இவர்கள் இருவரும் ஏற்கனவே தொற்றாளர்களுடன்தொடர்புடையவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.