போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் சம்பளம் பெறும் 200 பொலிஸார்
பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் இருந்து மாதந்தோறும் சம்பளம் (லஞ்சம்) பெற்று வந்ததாகக் கூறப்படும் சுமார் 200 பொாலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து அரச புலனாய்வு பிரிவு விசாரணைகளைத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாகப் பொதுப்பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால சிங்களப் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில், இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
கடத்தல்காரர்களுடன் தொடர்புகளைப் பேணிய சுமார் 10 அதிகாரிகள் இதுவரையில் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியதாக அடையாளம் காணப்பட்ட மேலும் 6 பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அவர்கள் தொடர்பான தகவல்கள் கடந்த வாரம் உளவுத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
பாதாள உலக மற்றும் போதைப்பொருள் கடத்தல்களை ஒடுக்குவதற்கு இவ்வாறான ஊழல் அதிகாரிகள் பெரும் தடையாக இருப்பதாக அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
பாதாள உலகக் குழு உறுப்பினர் ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், பொலிஸ் விசேட அதிரடிப்படையின் முன்னாள் கட்டளையிடும் அதிகாரியும், கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பாக இருந்த முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான வருண ஜயசுந்தரவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அண்மையில் விசாரணை நடத்தியுள்ளது.
இந்த விசாரணையின் போது அவரிடம் சுமார் 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்துமாறு அவரே விடுத்த கோரிக்கைக்கு அமைவாக அரசாங்கம் இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.
ஊழல் அதிகாரிகள் மற்றும் கடத்தல்காரர்களுக்கு இடையிலான வலையமைப்பை உடைப்பதற்காக, கல்பிட்டி உள்ளிட்ட சில காவல் நிலையங்களின் அனைத்து அதிகாரிகளும் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை முழுமையாக ஒடுக்குவதற்காக, காவல்துறை திணைக்களத்திற்குள் இருக்கும் 'கருப்பு ஆடுகளை' அடையாளம் கண்டு, அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளது.