கிளிநொச்சியில் விசேட அதிரடிப் படையினருக்கும் பொது மக்களுக்கும் இடையே மோதல்
கிளிநொச்சி, உமையாள்புரம் பகுதியில் விசேட அதிரடிப் படையினர் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில், குடும்பப்பெண்கள், பாடசாலை மாணவிகள் மற்றும் முதியவர்கள் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
உமையாள்புரம் காட்டுப் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுகின்றது என்று விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், அங்கு விரைந்த அதிகாரிகள் மணல் ஏற்றிய உழவு இயந்திரத்துடன் சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்தனர்.
14 பேர் விளக்கமறியலில்
இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேகநபரை அதிரடிப் படையினர் கொண்டு செல்ல விடாது தடுத்தனர். அங்கு திரண்ட பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த முறுகல் நிலைமை பின்னர் இருதரப்பு மோதலாக மாறியது.

இதனையடுத்தே, அரச கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் அதிரடிப் படையினர் மீது தாக்குதல் நடத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ், சம்பவ இடத்தில் இருந்த பாடசாலை மாணவிகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் என மொத்தம் 14 பேரை விசேட அதிரடிப் படையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 14 சந்தேகநபர்களும் கிளிநொச்சி நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்களை நேற்று(21) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
இந்தச் சம்பவம் குறித்து கிளிநொச்சி பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
புலம்பெயர் அமைப்புகளிடம் அரசு பெற்ற நிதியை உடனடியாக வெளிப்படுத்துங்கள்! அர்ச்சுனா எம்.பிக்கு பத்தரமுல்ல சீலரத்ன தேரர் சவால்