சமஸ்டியும் இல்லை-இரு தேசமும் இல்லை-13ம் இல்லை! 13 பிளஸும் இல்லை-13 மைனஸும் இல்லை: இனி அடுத்தது என்ன...!
இன்றைய 21 ஆம் நூற்றாண்டில் பொருளாதார நெருக்கடியால் பட்டினி சாவு என்பது எந்த ஒரு நாட்டுக்கும் ஏற்படப் போவதில்லை. உலகின் அரசியல் பொருளாதாரம் என்பது உச்சக்கட்ட. வளர்ச்சியை அடைந்திருக்கிறது.
அதிலும் குறிப்பாகக் காலனித்துவத்தின் முடிவுடன் Dead labour (இயந்திர சாதனங்களும் மூளையுழைப்புச் சாதனங்களும், அதேவேளை உயிருள்ள மனித உழைப்பு Living labour எனப்படும்) வளர்ச்சியுடன் பாரியளவு தொழிலாளர்களின் தேவையைக் குறைத்து பண்ட உற்பத்தியில் இயந்திரங்கள் பல்லாயிரம் மனிதர்களுடைய வேலையை சில இயந்திரங்களும் ரோபோக்களும் செய்து முடித்து விடுகின்றன. இதனால் உபரி உற்பத்தி (தேவைக்கு அதிகமான பண்டங்களின் உற்பத்தி) சேமிப்பில் உள்ளது.
அதுமட்டுமன்றி திடீரென ஏற்படுகின்ற தேவைகளுக்காகவும் மிக விரைவாகக் குறுகிய காலத்துக்குள் செயற்கையான உணவுகளை உற்பத்தி செய்திடவும் முடியும். இந்தப் பூமியில் மனிதனுக்கான தேவைகளுக்கு மிஞ்சிய உற்பத்தியை Dead labour செய்து முடித்திருக்கிறது. பங்கீட்டில்தான் அளவுகள் மாறுபடுகின்றனவே தவிர உற்பத்தி மிதமிஞ்சிவிட்டது.
பொருளாதார நெருக்கடி
எனவே, இன்றைய உலகின் அரசியல் பொருளியல் போக்கில் எந்த ஒரு நாட்டிலும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அங்குப் பட்டினியினால் மக்கள் இறக்கும் நிலை நிகழ முடியாது. அவ்வாறு நிகழ்வதற்கு இந்த உலக ஒழுங்கு ஒருபோதும் அனுமதிக்காது. உலகிற்கு இப்போது தேவைப்படுவது சந்தை.
அந்த சந்தைக்கு மக்கள் உயிருடன் இருக்க வேண்டும். எனவே பஞ்சம் ஏற்படுகின்ற இடங்களில் அரசுகளோ,வர்த்தக நிறுவனங்களோ, தொண்டு நிறுவனங்களோ, மத அமைப்புகளோ உபரி உற்பத்தியை தானம், கொடை, கடன் என்பதன் பேரில் பங்கீடு செய்து நிலமையைச் சமாளித்துவிடுகின்றன.
ஆகவே, மக்கள் மடிவதை ஒருபோதும் இன்றைய வர்த்தக உலகு விரும்பாது, அனுமதிக்காது. அண்மைய கால வரலாற்றில் மேற்கு ஐரோப்பாவில் இஸ்பெயினில் பொருளாதார மந்தம் ஏற்பட்டது. வங்கிகள் மூடப்பட்டன. எனினும் அங்கே உயிரிழப்புக்கள் ஏற்படவில்லை. இஸ்பெயின் குறுகிய காலத்துக்குள் ஐரோப்பிய நாடுகளால் அந்த நாட்டின் பொருளாதாரம் மேம்படுத்தப்பட்டு விட்டது. அவ்வாறே ஐரோப்பாவில் கிரீஸ் நாட்டில் பொருளாதார மந்தம் ஏற்பட்டது அங்கும் நிலைமை வழமைக்கு திரும்பிவிட்டது.
அந்த அடிப்படையிலேதான் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி எந்தவிதமான உயிர் இழப்புகளையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் அது ஒரு மக்கள் போராட்டத்தைப் பிரசவித்தது. அந்தப் போராட்டம் ஆட்சி மாற்றத்தையோ, கொள்கை மாற்றத்தையோ ஏற்படுத்தாமல் வெறும் ஆள் மாறாட்டத்தை மாத்திரமே அறுவடை செய்தது.
அறகலைய கிளர்ச்சி
அதே நேரம், குறுகியகாலம் அரசியல் தரப்பிலும், ஊடகப் பரப்பில் பல்வேறுபட்ட வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வாக்குறுதியுடன் ஓரளவு தற்காலிகமாக முடிவுக்கு வந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இலங்கையின் பொருளாதார நெருக்கடியினால் ஆட்சியாளர்களுக்கு எதிரான பெருமெடுப்பிலான "அறகளைய போராட்டம்" என்பது சிங்கள மக்களின் பொருளாதாரப் பிரச்சினையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருந்தது.
ஆனால் இந்தப் பொருளாதார பிரச்சனைக்கான அடிப்படை காரணம் தமிழ் மக்களை ஒடுக்குவதற்காக இலங்கை அரசு எடுத்த அரசியல், பொருளியல், இராணுவ முடிவுகள் என்பவற்றின் விளைவே என்பதைக் கருத்தில் கொள்ளச் சர்வதேசமும், சிங்கள தேசமும், தமிழர் தரப்பும் தவறிவிட்டன. பொருளாதாரப் பிரச்சினைக்கான அடிப்படை காரணங்களைத் தீர்க்காமல் தற்காலிக ஓட்டைகளை அடைக்கும் வேலையே இந்தப் போராட்டம் அறுவடையைச் செய்திருக்கிறது.
எனினும் எதிர்காலத்திலும் இலங்கையில் இத்தகைய பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும். அவ்வாறு ஏற்படப்போகின்ற அந்த நெருக்கடிகளையும் இந்த உலக ஒழுங்கிற்குடாக தீர்க்கப்படும் என்பதுவே உண்மையாகும். கொழும்பில் ஏற்பட்ட அறகலைய கிளர்ச்சியைப் பயன்படுத்தி தமிழ்மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கா கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தையும் தமிழ் அரசியல் தலைமைகள் எனப்படுவோர் சரியாகப் பயன்படுத்தத் தவறிவிட்டனர்.
சிங்கள தலைமைகளைப் பொறுத்த அளவில் சிங்கள மக்களுடைய பாணும், பருப்பும், எரிவாயுவும், பெட்ரோலியமும் கிடைக்க வைத்து விட்டார்கள். இனி தமிழர் பிரச்சனை எழாமல் தமிழ் மக்களை எவ்வாறு ஒடுக்கலாம் என்பது பற்றியே அவர்களுடைய திட்டங்களும், சிந்தனையும் செயல்படுமே தவிரப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அவர்கள் ஒருபோதும் முன்வரப்போவதில்லை.
சிங்கள தலைமைகளின் ராஜதந்திரம்
அதே நேரம் தமிழர் பிரச்சினையைத் தீர்க்கப் போவதாகப் பிராந்திய சக்திகளிடமும், சர்வதேச சக்திகளிடமும், தமிழ் மக்களிடமும் வாக்குறுதிகளை அள்ளி வழங்கவும் தயங்க மாட்டார்கள்.
சிங்கள தலைவர்கள் வாக்குறுதிகள் வழங்கும்போதே அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட மாட்டாது என்ற தீர்க்கமாக தீர்மனித்துவிட்டுத்தான் வாக்குறுதிகளை வழங்குவது சிங்கள தலைமைகளின் ராஜதந்திரம். இலங்கையின் பொருளாதாரம் பண்டங்களை வாங்கி விற்கும் இடைநிலைத் தரகு வர்த்தகப் பொருளாதாரமே.
எனவே சிங்கள தேசத்தின் பொருளாதார நெருக்கடியை எப்போதும் உலகம் தீர்த்து வைக்கும். அப்போது உலகம் தனக்கான நலன்களையும் கூடவே அறுவடை செய்துவிடும். தமிழ் தரப்பினரிடம் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அல்லது தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு காண எந்த ஒரு தீர்வு திட்டமும் கையில் இல்லை.
அதேபோல தீர்வைப் பெறுவதற்கான எந்த ஒரு போராட்ட வழிமுறையும் இவர்களின் கையில் இல்லை. தமிழ் அரசியல் தலைமைகள் எனப்படுவோரிடம் வரலாற்று ரீதியான அரசியல் பொருளியல் கொள்கைகளோ, திட்ட வரைவுகளோ இன்மையால் நடைமுறையில் கண்ணுக்குப் புலப்படுகின்ற அரசியல் கொந்தளிப்புகளையும் மாயத் தோற்றங்களையும் நம்பி அரசியல் சவாரி செய்ய முற்படுகின்றனர்.
தமிழ் மக்களின் அரசியல் தீர்வு
அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை இதோ இலங்கை இந்து சமுத்திரத்தில் மூழ்கிவிடப் போகின்றது, அது மூழ்குகின்றபோது தமிழருக்குப் பிரச்சினை தீர்ந்துவிடும், தீர்வு கிடைத்துவிடும் என்று அடிமட்டமாக நம்பினார்கள்.
எனினும் தமிழ் அறிவியலாளர்கள் மட்டத்தில் சிலர் சில வருடங்களுக்கு முன்னே கூறத் தொடங்கி விட்டார்கள் "இலங்கை பெரும் அரசியல் நெருக்கடியைச் சந்திக்கப் போகின்றது அந்த சந்தர்ப்பத்தை நாம் பயன்படுத்த வேண்டும் அதை நாம் பயன்படுத்தத் தவறினால் தமிழ் தமிழ் மக்களுக்குத் தீர்வு எதுவும் கிடைக்கப் போவதில்லை" அன்று பல்வேறுபட்ட ஊடகங்களுக்கூடாக எச்சரிக்கை மணி அடித்திருந்தனர்.
எனினும் அவை செவிடன் காதில் ஊதிய சங்காகிப் போயின. இப்போது தீர்க்கப்படாத தமிழ் மக்களின் அரசியல் தீர்வு பற்றி பேசுவது மிகவும் அவசரமும் அவசியமாகிறது. முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் கடந்த 13 ஆண்டுகளாகத் தமிழ் தலைமைகள் வெறும் கதிரை அரசியலுக்காக, நாடாளுமன்ற பிரவேசத்திற்காகவே வாய்கிழிய மேடைகளில் முழங்கினார்கள்.
அவ்வாறு முழங்கியவர்கள் நாடாளுமன்றத்திலும் பேச்சு போட்டியையும், விவாதப் போட்டிகளையும் நடத்தியது மாத்திரமே நிகழ்ந்தது "எண்ணைச் செலவுதான் பிள்ளை வளர்த்தி இல்லை" என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு.
13 ஒருபோதும் நடைமுறைக்கு வராது
அது தமிழ் மக்களுக்குத் தீர்வு பெற்றுத் தருவோம் என்று வாய்கிழியக் கத்தும் அரசியல்வாதிகளுக்குப் பொருந்தும். ஜி ஜி பொன்னம்பலமும், எஸ் ஜே வி செல்வநாயகமும், அமிர்தலிங்கமும் பேசாத பேச்சையா இவர்கள் இனியும் பேசப்போகிறார்கள்? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் 13 நடக்கும், 13 நடைமுறைப்படுத்தப்படும் என்று பல்வேறு வாக்குறுதிகளைத் தமிழ் மக்களுக்கு அள்ளி வீசினார்கள்.
அதே நேரத்தில் தமிழ் அரசியல் அறிவியல் தரப்பிலிருந்து 13க்கு மேலும் இல்லை , கீழும் இல்லை. 13 ஒருபோதும் நடைமுறைக்கு வராது என்று அடித்துக் கூறியுமிருந்தார்கள். ஆனாலும் இவற்றைப் பொருட்படுத்தாது மேதாவிச் சட்டத்தரணி அரசியல்வாதிகள் நல்லாட்சி அரசாங்கத்திலும் இணைந்து பயணித்து அந்த அரசாங்கத்தின் வாலில் தொங்கிக்கொண்டு தேனிலவு அரசியல் பயணம் செய்தார்கள்.
இறுதியில் தம்மைச் சிங்கள அரசியல்வாதிகள் ஏமாற்றிவிட்டார்கள் என்று வெட்கமின்றி வாய்விட்டுச் சொன்னார்கள். தமிழரசுக் கட்சியினரே இனி என்ன செய்யப் போகிறீர்கள்? தேர்தல்கள் வந்தவுடன் திடீரென நித்திரையால் எழும்பி போராட்டம் வெடிக்கும், அரசை எச்சரிக்கிறோம். பாரதூரமான விளைவைச் சந்திக்க நேரும், அழுத்தம் கொடுக்கிறோம் என்று பம்மாத்து விடுவதை விடுத்து உண்மையாகத் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க வேண்டுமானால் தலைவர்களே நீங்கள் முதலில் வீதியிலிறங்கி முன்னிலையில் நின்று போராடுங்கள்.
அதுவே தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்றுக் கொள்வதற்கான உபாயமாக அமையும். இவ்வளவு காலமும் நீங்கள் செய்த பழிபாவங்களுக்கான பிராயச்சித்தமாகவும் அமையும். உங்கள் மீது பூசப்பட்டு இருக்கின்ற கறையை கழுவுவதற்கான வழிமுறையாகவும் இது அமையும்.
ஆட்சி கவிழ்ந்துவிடும்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து அதிருப்தி அடைந்து அவர்கள் துரோகம் செய்கிறார்கள் என்று சொல்லிக்கொண்டு தாங்கள் மாற்றுத் தலைமைகள் என்று சொல்லிக்கொண்டு வெளியே வந்தவர்கள். இப்போது மாற்றுத் தலைமைக்குப் பதிலாக. தம்மிடையே மோட்டுச் சண்டையிட்டு மோட்டுத்தலைமைகள் ஆயினர்.
13 வேண்டாம், 13 தமிழர்களை அழிக்கும் என்று கூக்குரலிட்டு 13க்கு எதிராகச் சவப்பெட்டியைக் காவி ஊர்வலம் நடத்தினீர்கள் .அதுமட்டுமா சொன்னீர்கள் ஒரு நாடு இரு தேசம் என்று ஒரு புதிய கண்டுபிடிப்பு ஒன்றைச் சொன்னீர்கள் அதற்கு விளக்கம் தர மறுத்து விடுகிறீர்கள்.
அதற்கு உண்மையான அர்த்தத்தில் அரசியல் கோட்பாட்டில் விளக்கம் தந்தால் நீங்கள் மேலும் சிக்கலில் மாட்டு படுவீர்கள்.அது மட்டுமல்ல நீங்களும் தமிழரசும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பது அம்பலப்படும் என்பதுதான் உண்மை. சிங்கள அரசு ஒருபோதும் 13 ஐ நடைமுறைப்படுத்தாது.
அவ்வாறு செய்தால் ஆட்சி கவிழ்ந்துவிடும். ஆகவே 13 ஐ நடைமுறைப்படுத்தச் சொல்லிப் போராடினால் எதிரியை அம்பலப்படுத்த முடியும். அது சிங்கள தேசத்தை பெரும் அரசியல் நெருக்கடிக்குள் தள்ளும்.
இலங்கை அரசு
சர்வதேச ரீதியில் முகம் கொடுப்பது கடினமாகும். இதனை ஒரு தந்துரோபாய போராட்டமாக முன்னெடுக்க வேண்டும் என்று தமிழ் அரசறிவியல் பரப்பிலிருந்து சொல்லப்பட்டது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தரப்பு அவ்வாறு சொல்லியவர்களை இந்திய ரோவின் முகவர்கள் என்று அபாண்டமாக முத்திரை குத்தினார்கள்.
ஆனாலும் அந்த அரசறிவியல் தரப்பு எந்தவிதமான சுய நலனுமின்றி தொடர்ந்தும் தமிழ் மக்களின் விடுதலைக்காகவும், தமிழ் மக்களின் சுபிட்சமான எதிர்காலத்திற்காகவும் அரசியல் கருத்துருவாக்கத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது. இப்போது 13 வேண்டாம் என்று சவப்பெட்டி காவியவர்கள் என்ன வேண்டும் என்று போராட வேண்டும் அல்லவா.
அதுவே தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை கொண்டு வரும். இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டவுடன் அந்தப் பொருளாதார நெருக்கடியிலிருந்து தன்னை மீட்பதற்கான உபாயமாக மேற்குலகத்தையும் இந்தியாவையும் தயாபடுத்துவதற்காக திடீரென கடந்த ஜனவரி மாதம் ரணில் விக்ரமசிங்க 13ஐ நடைமுறைப்படுத்தப் போகிறேன் என்று இந்திய வெளிவிவகார அமைச்சரை அழைத்து அவர் முன்னிலையில் குறிப்பிடத்தோடு மாத்திரமல்ல அதனைச் சுதந்திர தினத்தன்று கொள்கை பிரகடனமாக அறிவிப்பேன் என்றும் அது பற்றி பெப்ரவரி 8ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என்றும் கூறியிருந்தார்.
அப்போதுங்கூட தமிழ் அரசறிவியல் பரப்பிலிருந்து இது ஒருபோதும் நடைமுறைக்கு வராது என்று தமிழ் மக்களுக்கும், இந்தியக் கொள்கை வகுப்பாளர்களுக்கும் சொல்லப்பட்டது. இப்போது இலங்கை அரசு பௌத்தப்பிக்குகளின் சீற்றத்துடன் 13ஐ ஒருபோதும் நடைமுறைப்படுத்த மாட்டேன் என்று கூறிவிட்டது.
தமிழ்ச் சமூகம்
ஆகவே இப்போது 13 இல்லை என்பது உறுதியாகிவிட்டது . இதற்குத்தேனே ஆசைப்பட்டீர்கள் கயேந்திரர்களே!? உங்கள் விருப்பு, இலட்சியம், ஆசை நிறைவேறி விட்டதுதானே? இனி என்ன செய்யப் போகிறீர்கள்? தொடர்ந்து நாடாளுமன்றத்தில் காட்டுக்கத்து கத்தி ஏதாவது சாதிக்கப் போகிறீர்களா? அது ஒருபோதும் முடியாது.
ஆகவே தமிழ் மக்களுக்கு என்ன வேண்டும் என்பதை வலியுறுத்தி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினர் போராட வேண்டும். அதுவே அரசியலில் தர்மம் ஆகும். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்சினர் அடிக்கடி தாங்கள் தியாக தீபம் திலீபன் வழியில் போராடுவதாகக் குறிப்பிடுகிறார்கள். திலீபனின் நினைவேந்தலை நடத்துவதற்காகவே கடந்த வருடம் திலீபன் நினைவுத் தூவியில் அடிபிடி, தள்ளுமுள்ளு , குடுமிச்ச சண்டை நடத்தியும் உள்ளீர்கள்.
ஆகவே உங்கள் பக்கத்தில் நியாயம் இருந்தால் நீங்கள் உண்மையாக திலீபனை விசுவாசிக்கிறீர்கள் என்றால் அவரின் வழியில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர்கள் இருவரும் களத்துக்கு வந்து அர்ப்பணிப்புடன் நேரடியாகச் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுங்கள். நீங்கள் போராடினால் உங்கள் பின்னே ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகம் அணி திரண்டு நிற்கும். அதுதான் தமிழ்த் தேசிய எழுச்சியை ஏற்படுத்துவதற்கான ஒரே வழியுமாகும்.
தமிழ்த் தலைமைகள்
நாடாளுமன்ற அரசியல் பேச்சுப் போட்டிகளும், வீரதீர கச்சனைகளும், பாசாங்கு நாடகங்களும் தமிழ் மக்களுக்குச் சோறு போடாது. இது ஏனைய அனைத்து தமிழ் கட்சிகளுக்கும் பொருந்தும். தமிழரசுக் கட்சியினர், விக்னேஸ்வரன் அணியினர் , மற்றும் அனைவர்க்கும் பொருந்தும்.
இப்போது எப்போராட்ட வமுறையுமின்றி வெறுங்கையுடன் நின்று, ஒருவரை ஒருவர் திட்டித் தீர்ப்பதையே அரசியலென்று தமிழர்களை ஏமாற்றாமல் உள்நாட்டு, வெளிநாட்டு அர்த்தத்தில் போராட்டத்தை முன்வைத்துக் களமிறங்க வேண்டும். அவ்வாறு முடியாவிட்டால் தோல்வியையும் இயலாமையையும் ஒப்புக்கொண்டு பதவிவிலகிப் போராடக்கூடியவர்களுக்கு வழிவிடுங்கள் என்று மாவீரர்களின் பெயரால் தமிழீழ இலட்சியத்தின் பெயரால் வரலாற்றினை கட்டளையிடுகிறாள்.
ஒரு நூற்றாண்டுகால போராட்ட வரலாற்றின் பின்பு இன்று தமிழ்த் தலைமைகள் எவ்வித போராட்டமுமின்றி வெறுங்கையுடன் நிற்கும் அவலத்தைக் கைவிட்டு புதிய உத்வேகத்துடன் நடைமுறைச் சாத்தியமான திட்டங்களுடன் களம் புகப்போவது யார்? இன்றைய சூழலில் தமிழ் தலைமைகள் இதய சுத்தியுடனும் அர்ப்பணிப்புடனும் போராடினால் காட்டுத் தீயெனப் போராட்டம் படர்ந்து விரியும்.

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
