11 இலட்சம் ரூபா மோசடி : பெண்ணொருவர் விளக்கமறியலில்
வெளிநாட்டிலிருந்து பெறுமதியான பொருட்கள் அனுப்பபட்டுள்ளன எனவும், அதனைப் பெறுவதற்குப் பணத்தை வைப்பிலிடுமாறு கோரி சுமார் 10 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா பணத்தை மோசடி செய்தவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருவதாவது,
கிளிநொச்சி - திருமுறிகண்டிப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை கிளிநொச்சியைச் சேர்ந்த மற்றொரு பெண் தொடர்புகொண்டு வெளிநாட்டிலிருந்து பெறுமதியான பொருட்கள் அனுப்பபட்டுள்ளன எனவும், அதனைப் பெறுவதற்குப் பணத்தை வங்கிக் கணக்கில் வைப்பிலிடுமாறும் கூறியுள்ளார்.
இதற்கமைய முறிகண்டியைச் சேர்ந்த பெண் சுமார் 10 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா பணத்தை வங்கியில் வைப்பிலிட்டுள்ளார்.
இது தொடர்பில் கடந்த செப்டெம்பர் மாதம் பொலிஸாரிடம் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டது .
அதன்பின் பொலிஸாரின் விசேட நடவடிக்கை மூலம் கொழும்பு தெமட்டகொடைப் பகுதியில் வைத்து, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.



