பொதுத்துறை ஊழியர்களுக்கு உதவித்தொகையாக 1000 ரூபா கொடுப்பனவு
பொதுத்துறை ஊழியர்களுக்கு உதவித்தொகையாக குறைந்தபட்சம் 1000 ரூபா கொடுப்பனவு பரிந்துரை, 2024ஆம் ஆண்டு பாதீட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இதனை தவிர, சில குறிப்பிட்ட துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 60 ஆண்டுகளுக்கு மேல் சேவை நீடிப்பு வழங்குவது மற்றும் வரி வலையை மேலும் விரிவுபடுத்துவது போன்றவையும் 2024 பாதீட்டில் இடம்பெறும் சில பரிந்துரைகளில் அடங்கும் என்று நிதி அமைச்சகத்தின் அதிகாரிகளை கோடிட்டு, ஆங்கில செய்தித்தாள் ஒன்று கூறுகிறது.
வருமான வரியில் குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்கு ஆட்பட்ட தொழில் வல்லுநர்களுக்கு வரவிருக்கும் பாதீட்டின் மூலம் நிவாரணம் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளையும் நிதி அமைச்சகம் ஆராய்ந்து வருவதாக அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
செலவுக் குறைப்பு நடவடிக்கை
பொதுத்துறை ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 60 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. எனினும் சுகாதாரத் துறையில் உள்ளவர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் பல தொழில்களில் உள்ளவர்கள் தங்கள் சேவைகளை இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு நீடிக்க வாய்ப்பு வழங்கப்படும்.
இதற்கு முக்கியக் காரணம் தற்போது இந்தப் பகுதிகளில் நிலவும் கடும் வெற்றிடங்களே என்று கூறப்படுகிறது.

கடுமையான நிதிப் பற்றாக்குறையின் காரணமாக நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை போன்ற நிறுவனங்கள் எந்தவொரு பாரிய அபிவிருத்தித் திட்டங்களையும் முன்னெடுக்காது.
ஓராண்டுக்குள் முடிக்கக்கூடிய திட்டங்கள் மற்றும் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மட்டுமே அவற்றால் மேற்கொள்ளப்படும்.இதற்கிடையில், பாதுகாப்பு அமைச்சகம் உட்பட அனைத்து அரசாங்க அமைச்சகங்களும் பெரிய அளவிலான செலவுக் குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட அறிவுறுத்தப்படும்.
2024 பாதீடு
கட்டிடங்களை வாடகைக்கு எடுப்பது மற்றும் வாகனங்களை வாடகைக்கு எடுப்பது, தளபாடங்கள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்வது போன்ற தேவையற்ற செலவினங்களைக் குறைப்பது இதில் அடங்கும். தனிநபர் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான தடை அடுத்த ஆண்டும் தொடரும்.
இந்தநிலையில் 2024 பாதீட்டின் முக்கிய கவனம் நாட்டின் வெளிநாட்டு இருப்புக்களை தற்போதைய 3.8 பில்லியன் அமெரிக்க டொலரில் இருந்து 6 பில்லியன் டொலராக அதிகரிப்பது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இலங்கை வரி வசூலில் போதுமான முன்னேற்றம் அடையத் தவறிவிட்டது. எனவே பிணை எடுப்புப் பொதியின் இரண்டாவது தவணை தாமதமாகலாம் என்று சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ள நிலையில் இது மிகவும் முக்கியமானது.

இந்தநிலையில் வரியை மேலும் அதிகரிக்கவும், தொடர்ந்து வரி செலுத்துவதில் தவறிழைப்பவர்களுக்கு அபராதத்தை அதிகரிக்கவும் புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளின் கூற்றுப்படி, 400 பில்லியன் ரூபா அளவான வரிகள் செலுத்தப்படாமல் உள்ளன. சுற்றுலா வருவாயை 1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்த்தும் நம்பிக்கையுடன் வரவிருக்கும் பாதீட்டில் சுற்றுலாத்துறைக்கு கூடுதல் ஒதுக்கீடுகள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |