மே 9 வன்முறை சம்பவம்: மேலும் நான்கு சந்தேகநபர்கள் கைது
மே மாதம் 09 ஆம் திகதி ஏற்பட்ட வன்முறை சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு சந்தேகநபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களான சமன்பிரிய ஹேரத் மற்றும் கோகிலா குணவர்தன ஆகியோரின் வீடுகள் மற்றும் கட்சி அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தி தீ வைத்த குற்றச்சாட்டில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமன்பிரிய ஹேரத்
நாடாளுமன்ற உறுப்பினர் சமன்பிரிய ஹேரத்தின் குளியாப்பிட்டியவில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு தீ வைத்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மஹலந்த பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய சந்தேகநபர் குளியாப்பிட்டிய பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கோகிலா குணவர்தன
இதேவேளை, லோலுவாகொட பிரதேசத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கோகிலா குணவர்தனவின் வீடு மற்றும் கட்சி அலுவலகம் மற்றும் அவரது உடன்பிறந்தவர்களின் வீடு மற்றும் வாகனம் ஆகியவற்றுக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
19, 22 மற்றும் 30 வயதுடைய சந்தேகநபர்கள் லொலுவாகொட மற்றும் மீரிகம பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும், இவர்கள் நேற்று நல்லா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு சம்பவங்கள் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை குளியாப்பிட்டிய மற்றும் நல்லா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்