(வீடியோ பார்ப்பதற்கு (VIDEO) வீடியோ என்ற படத்தின் மேல் அழுத்தவும்)
இன்று சனிக்கிழமை பிற்பகல் மெல்பேர்ண் நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மெல்பேர்ணில் இன்றைய தினம் தமிழ் இளையோர் அமைப்பினால் மகிழுந்து பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏற்கனவே காவல்துறையினரிடம் அனுமதி பெறப்பட்டதன் பிரகாரம் தமிழ் மக்களின் மகிழுந்து பேரணி திட்டமிடப்பட்ட வீதிகளின் ஊடாக அமைதியாக சென்று கொண்டிருந்தது.
மகிழுந்துகளில்,
அவுஸ்திரேலியாவே தமிழ்மக்களை காப்பாற்று,
சிறிலங்கா அரசே படுகொலைகளை நிறுத்து,
விடுதலைப்புலிகள் எமது சுதந்திர போராட்ட வீரர்கள்
போன்ற பல்வேறுவகையான பதாகைகள் கட்டப்பட்டிருந்தன. அவற்றைவிட சகல மகிழுந்துகளிலும் தமிழீழ தேசியக் கொடியும் தமிழீழ தேசியத் தலைவரின் படங்களும் ஓட்டப்பட்டிருந்தன.
இந்த பேரணி மெல்பேர்ண் நகரின் மையத்தின் ஊடாக சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராதவகையில் அடுத்தடுத்து தாக்குதலுக்கு உள்ளாயின.
இன்றைய தினம், மெல்பேர்ண் நகரில் விக்டோரியா நாடாளுமன்ற கட்டடத்துக்கு முன்பாக சிங்கள மக்கள் ஒரு பேரணியை ஏற்பாடு செய்திருந்தனர். அங்கு குழுமியிருந்த மக்களே இவ்வாறு தாக்குதல்களை மேற்கொள்ள ஆரம்பித்தமை பின்னர் தெரியவந்தது.
பேரணி நகரின் மத்தியால் சென்று கொண்டிருந்தபோது பிற்பகல் 1.30 மணியளவில் சிங்கள மக்களின் பேரணியில் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினர், தமிழ் மக்களின் பேரணியில் சென்று கொண்டிருந்த மகிழுந்துகளை நிறுத்தி அவற்றின் மீது கூட்டம் கூட்டமாக ஏறி தடிகள் பொல்லுகளால் மிலேச்சத்தனமாக தாக்கத் தொடங்கினர்.
தமிழீழ தேசிய கொடிகளை பறித்து கிழித்து கால்களில் போட்டு மிதித்தனர். பதாகைகளை பறித்து கிழித்தெறிந்தனர். மகிழுந்துகளின் மீது காறி உமிழ்ந்தனர். மகிழுந்து கதவுகளை திறந்தும் உள்ளே இருந்தவர்களை தாக்கினர்.
தேசியக்கொடியை பறிக்கும்போது அதனைத் தர மறுத்தவர்களின் கைகளை மகிழுந்தின் ஜன்னலுடன் சேர்த்து வைத்து தாக்கினர். மகிழுந்துகளில் இருந்தவர்களின் புகைப்படக் கருவிகளும் பறித்து உடைக்கப்பட்டன.
சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழீழ தேசிய கொடிகள் தாக்குதலை மேற்கொண்ட காடையர்களால் பறித்துச் செல்லப்பட்டன. இந்த சரமாரியான தாக்குதலில் சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் உட்பட பலர் காயங்களுக்குள்ளாகினர். சுமார் ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் கடும் இரத்தக் காயங்களுக்குள்ளாகினர். இருவர் படுகாயமடைந்த நிலையில் உடனடியாக அம்புலன்ஸில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
தமிழ் மக்களின் சுமார் ஏழுக்கும் மேற்பட்ட மகிழுந்துகள் பாரிய சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன. கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. பெருந்திரளாக வந்து திடீரென மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை சற்றும் எதிர்பாராத தமிழ் மக்கள், எந்த வன்முறைகளிலும் ஈடுபடாது நிலைமையை சுதாகரித்தவாறே தமது பேரணியை தொடர்ந்தனர்.
அங்கு தாக்குதல் மேலும் மோசமடையாமல் காவல்துறையினர் விரைந்து வருவதற்குள் பல அசம்பாவிதங்கள் இடம்பெற்று விட்டடன. இருந்தபோதும் நிலைமையின் கொடூரத்தை அறிந்து மேலதிக காவல்துறையினர் வந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தம்மாலான சகல நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொண்டனர்.
இந்த தாக்குதல்களை பொறுத்துக்கொண்டு தமது பேரணியை தொடர்ந்த தமிழ்மக்கள் வீதி ஓரங்களில் நின்று தாக்குதல் நடந்த உறவுகளையும் சேர்த்துக்கொண்டு தமது பேரணி சேருமிடத்தை நோக்கி புறப்பட்டது. பிற்பகல் 4.30 மணியளவில் பேரணி சென்று சேருவதற்கு முன்னரே திட்டமிட்ட இடத்தை சென்றடைந்தது.
தமிழ் மக்கள் தாக்கப்பட்ட செய்தியை கேள்வியுற்ற பேரணியில் கலந்துகொள்ளாத மெல்பேர்ண் தமிழ் உறவுகள் உடனடியாக பேரணி முடிவடைந்த இடத்துக்கு விரைந்து வந்தனர். மெல்பேர்ண் வாழ் தமிழ் உறவுகளின் மீது தொடுக்கப்பட்ட இந்த மிலேச்சத்தனமான தாக்குதல் சம்பவத்தை திரித்து, தம்மை விடுதலைப்புலி பயங்கரவாதிகள் தாக்க வந்ததாக அவுஸ்திரேலிய ஊடகங்களுக்கு செய்தி வழங்கிய சிங்கள அமைப்புகள் அதில் வெற்றியும் கண்டன.
ஆனால், உண்மை நிலைவரம் தொடர்பாக மெல்பேர்ண் தமிழ் இளையோர் அமைப்பு அவுஸ்திரேலிய ஊடகங்களை தொடர்பு கொண்டு முழு ஆதாரங்களுடன் சம்பவத்தை விளக்கி, பாதிக்கப்பட்டவர்களின் செவ்விகளையும் வழங்கியுள்ளது.
இதேவேளை, நொறுக்கப்பட்ட மகிழுந்து உரிமையாளர்கள் மற்றும் தாக்கப்பட்டவர்கள் காவல்துறையினரிடம் சென்று முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர். சம்பவம் தொடர்பாக தாம் துரித விசாரரணை செய்வதாக காவல்துறையினர் உறுதியளித்துள்ளனர்.
இதேவேளை இன்று நடைபெற்ற “சுதந்திரத்துக்கான ஊர்திப்பவனி" க்கு ஆதரவாக வானத்திலே தனியார் விமானம் ஒன்று "சிறிலங்காவே தமிழர்களை கொல்வதை நிறுத்து-srilanka stop killings tamils" என்ற வாசகத்தை பறக்கவிட்டபடியே மெல்பேர்ண் நகரின் முக்கிய பகுதிகள் ஊடாக சுமார் 2 மணித்தியாலங்களாக தன்னுடைய பறப்பை மேற்கொண்டதை காணக்கூடியதாக இருந்தது.




















|