எப்படியான இரகசிய நடவடிக்கைகள் இந்தியப் புலனாய்வுப் பிரிவினரால் புலம்பெயர் ஈழத் தமிழரைக் குறிவைத்து எடுக்க முடியும்? அதனைத் தடுப்பதற்கு ஈழத் தமிழர் என்ன செய்யவேண்டும்
இவை பற்றி நாம் விரிவாகப் பார்பதற்கு முன்னதாக, இதுவரை ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியா செய்ததாக வெளிவந்த மேலும் சில இரகசிய நடவடிக்கைகளை முதலில் மீட்டுப் பார்த்துக்கொண்டு இருக்கின்றோம்.
இது, இனிமேல் இந்தியா ஈழத் தமிழர் விடயத்தில் செய்வதற்குச் சாத்தியமாக உள்ள இரகசிய நடவடிக்கைகளை ஈழத் தமிழர் ஊகிப்பதற்கு உதவியாக இருக்கும்.
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியப் புலனாய்வுப் பிரிவு மேற்கொண்டதாக வெளிவந்த மிக முக்கியமான ஒரு நடவடிக்கை பற்றிய செய்தியை இந்த வாரம் பார்க்க இருக்கின்றோம்.
அதாவது கருணா விவகாரத்தில் இந்தியப் புலனாய்வுப் பிரிவின் கரங்கள் இருந்தன என்கின்ற அடிப்படையில் வெளிவந்த செய்திகள் பற்றித்தான் இந்தவாரம் நாம் ஆராய இருக்கின்றோம்.
கருணா விவகாரத்தில் இந்தியப் புலனாய்வுப் பிரிவு பல வழிகளில் சம்பந்தப்பட்டதாக பல்வேறு ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்தன. அந்தச் செய்திகளின் அடிப்படையில்தான் இந்த விடயத்தை நாம் அணுக இருக்கின்றோம்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் இன்றைய இந்த மோசமான தோல்விக்கு காரணமாக இருந்த பல விடயங்களுள் கருணா விவகாரம் மிக முக்கியமான ஒன்று என்பதில் சந்தேகம் இல்லை.
கருணா விவகாரம் ஒரு தனிப்பட்ட நபரின் நடவடிக்கை என்று விடுதலைப் புலிகளும், என்னைப் போன்ற சில தமிழ் ஊடகவியலாளர்களும் கூறிக்கொண்டாலும், கருணா விவகாரம் விடுதலைப் புலிகள் அமைப்பினுள் தோன்றிய ஒரு பிளவு என்றுதான் அனைத்துலக ஊடகங்களும், இராணுவ விமர்சகர்களும் குறிப்பிடுகின்றார்கள். கருணா என்று விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதியுடன் மேலும் ஏராளமான தளபதிகள், ஆயிரக்கணக்காண போராளிகள் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து நின்றதை அந்த மாபெரும் அமைப்பில் ஏற்பட்ட பிளவு என்றுதான் இராணுவ ஆய்வாரள்கள் பலர் குறிப்பிடுகின்றார்கள்.
பிற்காலத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பினை பலவீனப்படுத்திய ஒரு விடயமாகவே இந்தப் பிளவு பல தரப்பினராலும் நோக்கப்படுகின்றது.
கருணாவின் பிளவு விவகாரத்தில் இந்திய உளவு அமைப்புகளின் கரங்கள் இருந்ததா என்றுதான் வெளிவந்த செய்திகளின் அடிப்படையில் இந்த வாரம் நாம் பார்க்க இருக்கின்றோம்.
கருணாவின் பிரிவு இடம்பெறுவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து வெளிவரும் Frontline என்ற ஆங்கிலப் பத்திரிகையில் ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது.
அந்தக் கட்டுரையில் இவ்வாறு கூறப்பட்டிருந்தது. உண்மையில் விடுதலைப் புலிகள் அமைப்பில் கருணா கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவராக இருந்தும் சக்தி மிக்க தலைவராக உருவாகி வருகின்றார். பிரபாகரனை மிஞ்சும் தலைவராகவும் அவர் வர முடியும். ஒரு நாள் பிரபாகரன் இடத்திலேயே கருணா இப்படிச் சொல்லும் நிலை வரலாம். நான் கிழக்குப் பகுதியைப் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் வடக்குப் பகுதியைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
இந்தக் கட்டுரை 2002ம் ஆண்டு ஜூன் மாதம் 22ம் திகதி வெளியான Frontline பத்திரிகையில் வெளியாகி இருந்தது. அதாவது, கருணா விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிவார் என்று யாருமே கனவு கூட காணாத காலகட்டத்தில் இந்திய வெளியுறவு கொள்கையில் மிக முக்கிய பாத்திரம் வகிக்கின்ற இந்த பத்திரிகை இப்படியான கட்டுரையைத் தீட்டியிருந்தது. இது, கருணா விவகாரத்தில் இந்தியாவின் கரங்கள் இருந்திருக்கலாம் என்கின்ற சந்தேகத்தை பல ஆய்வாளர்களுக்கு கிளப்பியிருந்தது.
கருணாவின் பிளவு இடம்பெற்றதைத் தொடர்ந்து, இந்தப் பிளவின் விளைவு பற்றி ஆராயும்படியான ஒரு கருத்தரங்கு இந்திய உளவு அமைப்பினால் சென்னையில் நடாத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தன. பார்வையாளர் ஆய்வு மையம் என்ற அமைப்பினரால் சென்னையில் இந்த கருத்தரங்கு நடாத்தப்பட்டது. இந்தக் கருத்தரங்கிற்கு இந்திய உளவுத்துறையின் முன்நாள் அதிகாரி பீ.இராமன் தலைமை தாங்கினார். இந்தக் கருத்தரங்கை ஆரம்பித்துவைத்துப் பேசிய இந்து ராம், கருணா பிரிந்துவிட்டதால் புலிகள் அமைப்பு இனி பலவீனமாகிவிடும். வடக்கு கிழக்கு மாகாணங்களைப் பிரிக்கவே கூடாது என்ற கருத்துக்கு இனி பலத்த அடி விழுந்துள்ளது. இனி வடக்கும் கிழக்கும் ஒரே பகுதியாக இணையப் போவதேயில்லை. கருணாவின் பிரிவினால் தமிழ் ஆயுதப் போராட்டம் இனி முடிவுக்கு வந்துவிட்டது என்று கூறியிருந்தார். இந்து ராமின் முழுமையான பேச்சு 2004ம் ஆண்டு மார்ச் மாதம் 26ம் திகதி Observer India என்ற ஊடகத்தில் வெளியாகி இருந்தது.
இந்தக் கருத்தரங்கு இந்திய உளவுத்துறையினராலேயே நடாத்தப்பட்டதாக விடுதலை க. இராஜேந்திரன் எழுதி பெரியார் திராவிடக் கழகத்தால் 2007ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஈழப் பிரச்சனையில் இந்திய உளவு நிறுவனங்களின் சதி என்ற ஆய்வு நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவைகள் அனைத்து கருணா விவகாரத்தின் ஆரம்பத்தில் அல்லது அந்த விவகாரம் உருவாவதற்கு முன்னதாக அதில் இந்திய உளவு அமைப்புக்களின் கரங்கள் இருந்திருக்கலாம் என்கின்ற சந்தேகத்தை ஏற்படுத்தும்படியாக வெளிவந்த செய்திகள்.
ஆனால் கருணா விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து புலிகள் அமைப்பால் தோற்கடிக்கப்பட்டு, வடக்கு கிழக்கை விட்டு வெளியேறியிருந்த சந்தர்பத்தில், கருணா விவகாரத்தில் இந்திய உளவு அமைப்பின் கரங்கள் இருந்தன என்பதை உறுதியாக வெளிப்படுத்தும்படியான செய்திகள், காட்சி மாற்றங்கள் அடிக்கடி வெளியாகியபடியே இருந்தன.
கருணா விவகாரம் சூடு பிடிக்க ஆரம்பித்த 2004ம் ஆண்டின் மத்தியில், கருணா குழுவுடன் ஈ.என்.டி.எல்.எப். இணைந்து புதிய அரசியல் கட்சி ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த நிகழ்வு ஒன்றும் மறைமுகமகவோ, இரகசியமாகவோ நடைபெறவில்லை. பகிரங்கமாகவே இந்த இரண்டு தரப்பினரும் இணைந்திருந்தார்கள். புதிதான அரசியல் கட்சி ஒன்றை அமைத்தார்கள். சிங்களப் பேரினவாதிகளின் மேடைகளில் ஜே.வீ.பியினருடன் இணைந்து ஈ.என்.டீ.எல்.எப்.பிரமுகர்களும் தோன்றி அரசியல் நடாத்தினார்கள்.
கருணாவின் தலைமையில் உருவனதாகக் கூறப்பட்ட அந்த புதிய கட்சியின் செயலாளராக ஞானராஜா நியமிக்கப்பட்டார். (ஈ.என்.டீ.எல்.எப் இன் தலைவர் பரந்தன் ராஜனின் சகோதரரான ஞாணராஜா, ஈ.என்.டீ.எல்.எப். அமைப்பின் ஒரு முக்கியஸ்தர்). ஈ.என்.டீ.எல்.எப். இன் சர்வதேச இணைப்பாளர் ராமராஜன் இந்தக் கட்சியினது சர்வதேச தொடர்புகளைக் கவனித்து வரும் பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார். இவர்கள் இலங்கைக்கும், புதுடில்லிக்கும் இடையில் பறந்து திரிந்து, “கருணா அணி” அரசியல் செய்தார்கள்.
ஈ.என்.டீ.எல்.எப். இனரது முக்கிய உறுப்பினர்களான புளொட் மாமா (புளொட் அமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு இராணுவப் பொறுப்பாளர்), மனோ மாஸ்டர் (புளொட் இனது முன்னாள் கிளிநொச்சி இராணுவப் பொறுப்பாளரும், ஈ.என்.டீ.எல்.எப். அமைப்பின் தேசிய அமைப்பாளரும்), பீ..ராஜரட்ணம் (ஈ.என்.டீ.எல்.எப். கட்சின் வடக்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர்) போன்ற முக்கியஸ்தர்களும் இந்தியாவில் இருந்து வந்து கருணா அணியில் இணைந்து கொண்டார்கள்.
இந்திய ‘றோ’ வினால் உருவாக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வரும் ஈ.என்.டீ.எல்.எப். (ENDLF) என்று அழைக்கப்படும் ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (Eela National Democratic Liberation Front) என்ற தமிழ் அமைப்பு, றோவின் OSO (Office of Special Operations) பிரிவின் கீழ் நேரடியாகச் செயற்படும் ஒரு அமைப்பு என்பது அனைவரும் அறிந்த ஒரு இரகசியம். புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பில் இருந்து இந்திய றோவுக்கு சார்பாக செயற்பட்டவர்களைக் கொண்டுதான் இந்த ஈ.என்.டீ.எல்.எப். அமைப்பு, 1987இன் நடுப்பகுதியில், இந்திய றோ புலனாய்வுப் பிரிவினரால் உருவாக்கப்பட்டது. இந்தியப் படை ஆக்கிரமிப்பு காலப்பகுதியில் இந்தியப் புலனாய்வுப் பிரிவான றோ இனது வழிநடத்தலில், றோ இன் ஒரு அங்கமாகவே ஈ.என்.டீ.எல்.எப். செயற்பட்டு வந்தது. பின்னர் இந்தியப் படையினர் நாடு திரும்பியபோது இந்த ஈ.என்.டீ.எல்.எப். இனரும் இந்தியாவிற்கு தப்பியோடி இருந்தார்கள். இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் மல்கங்கிரி என்ற கிரமத்தில் தங்கவைக்கப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்த ஈ.என்.டீ.எல்.எப்., திடீரென்று கருணா விவகாரத்தில் உள்நுழைந்ததன் மூலம், றோவினது நேரடியான தலையீடு கருணா விவகாரத்தில் இருக்கின்றது என்கின்ற உண்மையை வெளிப்படுத்துவதாக அமைந்தது.
கருணா விவகாரத்தில் இந்தியாவின் புலனாய்வுப் பிரிவு தனது முகத்தை வெளி உலகிற்குக் காண்பித்த முதலாவது சந்தர்ப்பம் என்று இதனைக் குறிப்பிடலாம்.
பிரபல பத்தி எழுத்தார் டி.பி.எஸ். ஜெயராஜ் சண்டே லீடர் பத்திரிகைக்கு எழுதியிருந்த ஒரு ஆய்வில் கருணா விவகாரத்தில் இந்தியப் புலனாய்வுப் பிரிவின் கரங்கள் ஈ.என்.டி.எல்.எப். இனது தொடர்புகள் மூலம் இருப்பது பற்றி தெரிவித்திருந்தார்.
இதேபோன்று கருணா மற்றும் ஈ.என்.டி.எல்.எப். அமைப்பினரின் விவகாரத்தில் றோவின் கரங்கள் இருந்தன என்கின்ற செய்தியை இந்தியாவின் டெகல்கா என்ற ஊடகம் 2006 ஜூலை மாதம் 1ம் திகதி தெரிவித்திருந்தது.
இதேபோன்று கருணா விவகாரத்தின் பின்னனியில் இந்திய உளவு நிறுவனங்களின் சம்பந்தம் இருக்கலாம் என்கின்ற சந்தேகத்தை இந்தியாவின் பல்வேறு ஊடகங்களும் நேரடியாகவும் மறைமுகமாகவும் வெளியிட்டு வந்தன.
பெங்களுரில் இருந்து வெளிவரும் டெக்கான் கெரால்ட் என்ற பத்திரிகை 2002 மார்ச் 16ம் திகதி வெளியிட்ட கட்டுரை, புதுடில்லியில் இருந்து வெளிவரும் திபயோனிர் என்ற ஊடகம் 2002 மார்ச் மாதம் 24ம் திகதி வெளியிட்ட கட்டுரை உட்பட பல்வேறு செய்திகளை அடிப்படையாக வைத்து ஆய்வுகளை மேற்கொண்ட நடுநிலையான ஆய்வாரள்கள், கருணா விவகாரத்தில் இந்திய உளவு அமைப்பின் கரங்கள் இருந்ததை நிராகரித்துவிட முடியாது என்றே கூறுகின்றார்கள்.
இது இவ்வாறு இருக்க, 2004ம் ஆண்டு அக்டோபர் இறுதிப் பகுதியில் கருணாவின் இருப்பிடம் தொடர்பாக வெளியான ஒரு செய்தியானது, கருணா விவகாரத்தில் இந்தியாவின் பங்களிப்பும் இருக்கின்றதா என்கின்ற கேள்வியை மக்கள் மனங்களில் ஆழமாக ஏற்படுத்தியிருந்தது. கருணா இந்தியத் தூதரகத்தில் மறைந்திருப்பதாக அப்பொழுது ஒரு செய்தி வெளியாகியிருந்தது.. அக்காலகட்டத்தில் கருணாவின் சகாக்களைத் தேடித்தேடி அழித்துவந்த விடுதலைப் புலிகளின் புலனாய்வு பிரிவினரிடம் இருந்து கருணாவைக் காப்பாற்றுவதற்காக அவரை இந்தியத் தூதரகத்தில் தங்க வைத்திருப்பதாக பல செய்திகள் வெளியாகி இருந்தன. தூதரகத்தில் தங்கவைக்கப்பட்டிருக்கும் கருணாவை இந்தியப் புலனாய்வுப் பிரிவு தனது புலனாய்வு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப் போகின்றது என்று, சில கொழும்பு நாழிதழ்களும் செய்திகள் வெளியிட்டிருந்தன. கருணா விவகாரத்தை இந்தியா தனது கைகளில் எடுத்துக்கொண்டதை வெளிப்படுத்திய மற்றொரு சந்தர்ப்பம் இது என்று கூறலாம்.
இதனைத் தொடர்ந்து மேலும் சில செய்திகள் வெளியாகியிருந்தன. கருணா அணியில் இருந்து விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த சிலர் இந்த தகவலை வெளியிட்டிருந்தார்கள். அதாவது இந்தியாவில் பயிற்சி பெற்று அங்கு தங்கியிருக்கும் சுமார் 550 ஈ.என்.டீ.எல்.எப். உறுப்பினர்கள் கருணா அணியில் இணைந்துகொள்ள உள்ளதான தகவல் வெளியாகியிருந்தது. இது போன்ற உத்தரவாதம் கருணா அணியினருக்கு அவர்களின் பொறுப்பாளர்களால் வழங்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
கருணா அணியில் ஈ.என்.டீ.எல்.எப். இனர் இணைந்துள்ளதான உண்மை கொழும்பில் இடம்பெற்ற ஒரு படுகொலையின் மூலம் நிரூபிக்கப்பட்டது. ஈ.என்.டீ.எல்.எப். அமைப்பின் ஒரு முக்கியத்தரும், 15 வருடங்களக இந்தியாவில் தங்கியிருந்தவரும், இந்தியப் பிரஜை அந்தஸ்தைப் பெற்றவரும், கருணா அணியினருடன் இணைந்து செயற்பட்டவருமான ரங்கப்பா (சன்னிபோய் ஒக்கஸ்) 24.11.2004 கொழும்பில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தப் படுகொலை விடயத்தில் இந்திய அரசாங்கம் கருத்தெதையும் வெளியிடாமல் அடக்கி வாசித்ததன் மூலம், ரங்கப்பா இரகசிய நடவடிக்கை ஒன்றிற்காக கொழும்பில் தங்கியிருந்தாரோ என்கின்ற சந்தேகம் சில ஆய்வாரள்களால் அந்த நேரத்தில் எழுப்பட்டிருந்தது.
இந்தியப் புலனாய்வு அமைப்பினர் கருணா அணியினருடன் சேர்ந்தியங்கும் விடயம் மற்றொரு சந்தர்ப்பத்தில் வெளியான செய்தியினூடாக உலகிற்கு கூறப்பட்டிருந்தது. 15.04.2005 அன்று மட்டக்களப்பு எல்லையில் பொலநறுவை மாவட்டத்திலுள்ள அறங்களன்வில என்ற காட்டுப் பகுதியில் உள்ள கருணா அணியினரின் முகாம் ஒன்று தாக்குதலுக்கு உள்ளானது. இந்த முகாமில் தங்கியிருந்த 9 நபர்கள் கொல்லப்பட்டார்கள். கொல்லப்பட்டவர்களுள் விஜயன், ரவி என்ற இருவர் இந்தியக் கடவுச் சீட்டுக்களையும், இந்திய சாரதி அனுமதிப் பத்திரங்களையும் தம்வசம் வைத்திருந்தார்கள். இவர்கள் இருவருமே இந்தியாவில் தங்கியிருந்து பயிற்சி பெற்ற ஈ.என்.டீ.எல்.எப். உறுப்பினர்கள்; என்பது குறிப்பிடத்தக்கது. அத்தோடு இந்திய புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மேலும் இந்தியர்கள் இருவரும் இந்த முகாமில் தங்கியிருந்ததாகவும், அவர்களும் தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் தெரிவித்தன. ஆனால் அவர்களின் உடலங்கள் இலங்கைப் படையினரால் அகற்றப்பட்டுவிட்டதாகவும்; தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து கருணா இந்தியாவில் தங்கியிருந்து செயற்படுவதான தகவல் ஒன்றை, விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த கருணா குழு உறுப்பினர்கள் இருவர் வெளியிட்டிருந்தார்கள். 06.12.2005 அன்று புலிகளிடம் சரணடைந்த ஞானதீபன், புகழ்வேந்தன் என்ற கருணா குழு உறுப்பினர்கள், கருணா அணி பற்றிய பல தகவல்களை வெளியிட்டிருந்தார்கள். அவற்றில், கருணா இந்தியாவில் தங்கியிருந்து செயற்பட்டுவருகின்றார் என்கின்ற ஒரு தகவலையும் வெளியிட்டிருந்தார்கள்.
இதேபோன்று 02.02.2006 அன்று விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த அருள்ராஜ் என்ற 15 வயதுச் சிறுவன், இந்தியாவை சார்ந்த ஒரு தரப்பினர் கருணா அணியினர் தங்கியிருக்கும் இடங்களில் இருந்து செயற்படுகின்றார்கள் என்கின்ற உண்மையை வெளிப்படுத்தியிருந்தார். சுமார் 200 இலங்கை இராணுவ வீரர்கள் பாதுகாப்பு வழங்க பொலநறுவை மாவட்டத்திலுள்ள தீவுச்சேனை பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணா அணியினரின் முகாமில், சில அன்னியர்களும் தங்கியிருப்பதாகவும், அவர்கள் இந்தியத் தமிழ் பேசுவதாகவும், அவர்கள் சிரேஷ்ட நிலையில் உள்ள கருணா குழு உறுப்பினர்களுடன் மட்டும்தான் உரையாடுவதாகவும், தங்களுடன் உரையாடுவதில்லை என்றும் தெரிவித்திருந்தான். இது, இந்தியப் புலனாய்வுப் பிரிவினர் கருணா அணி என்கின்ற பெயரில் இயங்கிவரும் குழுவினருடன் சேர்ந்து செயற்பட்டு வருகின்றார்கள் என்கின்ற சந்தேகத்தை பரவலாகவே எழுப்பியிருந்தது.
இதேபோன்று 30.01.2006 அன்று கருணா பிரிவினரால் கடத்தப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழக உறுப்பினர்கள் தெரிவித்த ஒரு விடயமும், இந்தியர்கள், அல்லது இந்தியாவில் நீண்ட காலம் தங்கியிருந்தவர்கள் கருணா குழுவில் இருக்கின்றார்கள் என்கின்ற உண்மையை நிரூபிப்பதாக இருந்தது. தாங்கள் கடத்திச் செல்லப்பட்டு தங்கவைக்கப்பட்ட இடத்தில் தங்கியிருந்தவர்களில் சிலர் தமக்குள் ஹிந்தி மொழி பேசியதாக, அவர்கள் தெரிவித்திருந்தார்கள்.
ஆக, கருணா விவகாரம் சூடுபிடிக்க ஆரம்பித்திருந்த அந்தக் காலகட்டத்தில், அந்த விவகாரத்தில் இந்திய புலனாய்வுத்துறையின் இரசியக் கரங்கள் இருந்த விடயங்களும் சூடு பிடிக்க ஆரம்பித்திருந்தது.
சரி இனி மீண்டும் பழைய கேள்விக்கே வருவோம்.
எப்படியான இரகசிய நடவடிக்கைகள் இந்தியப் புலனாய்வுப் பிரிவினரால் தற்பொழுது புலம்பெயர் ஈழத் தமிழரைக் குறிவைத்து எடுக்க முடியும்?
அதனைத் தடுப்பதற்கு ஈழத் தமிழர் என்ன செய்யவேண்டும்?
இதற்கான பதில்களை எதிர்வரும் வாரங்களில் தேடுவதற்கு முயல்வோம்.
அதற்கு முன்னதாக ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டதாக வெளியோன மேலும் சில இரகசிய நடவடிக்கைகள் பற்றியும் சுருக்கமாகப் பார்ப்போம். |