2000 வருடங்களுக்கு மேலாக வேரூன்றி நிற்கும் ஒரு இனம் இன்றைய நிலையில் ஒரு உரிமையும் அற்றதாக ஆக்கப்பட்டது. 1958, 77, 83, 86, 96, 2006, 2009 ஆகியவை இலங்கைத் தமிழரால் மறக்க முடியாத வருடங்களாக உள்ளன. முன்பு தமது நிர்வாகத்தை வகுப்பதற்கு ஒருமித்த ஆட்சியை வகுத்த காலனித்துவ அரசினரால் தமிழினத்தின் ஆட்சி சிதைக்கப்பட்டு, இன்று தனது குடிமக்களில் ஒரு பகுதியினரின் குடியுரிமையை இழக்கும் நிலைக்கு தள்ளப்படும் ஒரு நிலைமை உருவாகியுள்ளது.
ஒரு மனிதனின் அடிப்படை உரிமைகள் ஆகிய நிலம், மொழி, கலாச்சாரம் ஆகிய யாவும் இன்று அழிக்கப்பட்டு வருகின்றன. ஒரு தேசிய, இன, மொழியாலான குழுவை முழமையாகவோ பகுதியாகவோ திட்டமிட்டு ஒழுங்கமைக்கப்பட்ட வகையில் அழிப்பது இனஅழிப்பு ஆகும்.
இனஅழிப்புப் பற்றிய வரைவிலக்கணங்களில் பல் வகைகள் இருப்பினும், 1948இல் ஐ.நா.சபையில் இனஅழிப்பைத் தடுத்துத் தண்டிக்கும் நோக்குடன் அமைக்கப்பட்ட சட்டத்தின் 2வது பிரிவின்படி மேற்கூறப்பட்ட ஒரு குழுவின் அங்கத்தவரைக் கொல்லுதல், அவர்களின் உடலையோ மனதையோ காயப்படுத்தல், அவர்களுடைய வாழ்க்கையை முழுதாகவோ பகுதியாகவோ சீரழிப்பதற்கு ஏதுவான சூழ்நிலையைத் திட்டமிட்டு உருவாக்கல், அவர்களின் சந்ததி வளர்ச்சியைத் தடுத்தல், பலாத்காரமாகப் பிள்ளைகளை ஒரு குழுவிலிருந்து வேறொருகுழுவுக்கு மாற்றுதல் ஆகிய அனைத்தும் இனஅழிப்பின் வரைவிலக்கணத்துள் அடங்கும்.
பொதுவாகக் கூறின் இனஅழிப்பு என்றால் ஒரு இனம் முழுவதும் உடனே அழிக்கப்படுவது (எல்லா மக்களையும் ஒரே நேரத்தில் அப்படி அழித்தாலொழிய) அல்ல. வாழ்க்கையில் தேவையான அம்சங்களைத் திட்டமிட்டு வௌ;வேறு செயல்களால் ஒரு குழுவை நிர்மூலமாக்குவதற்குச் செய்யப்படும் நடைமுறைகள் இனஅழிப்பாகும். அவற்றின் குறிக்கோள், அக்குழுவின் அரசியல், சமூக, மொழி, தேசிய, உணர்வுகளையும், பொருளாதார இருப்பையும் பிரிவு படுத்தி அதன் தனிமனித பாதுகாப்பு, விடுதலை, சுகாதாரம், தன்மானம், உயிர்வாழ்தல் ஆகியவற்றை அழிப்பதும் எனலாம்.
ஐக்கிய நாட்டின் அமைப்பில் பணி புரிந்து, ஈழப்போர் முடிவுற்றபின் இராஜினாமாச் செய்த கார்டன் வெயிசின் கூற்றுப்படி, யுத்தத்தின் இறுதி நாட்களில் 40,000 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதுடன், சாட்சிகளாகப் பெற வேண்டியவர்கள் (உயிருடன்) புதைக்கப்பட்டு மவுனிக்கப்பட்டதில் இருந்து, போர்க்குற்றங்களும் இனஅழிப்பும் 1948 முற்பகுதியில் இருந்து இலங்கை அரசால் நடத்தப்பட்டமை புலனாகின்றது.
இன்று, சர்வதேச சமூகம் இலங்கை அரசைத் தனது சொந்த விசாரணைக் குழுவை அமைக்கும்படி கேட்கின்றது. ஒரு நாடு நேரத்தை வீணடிக்கும் பொருட்டுச் செய்யும் முதல் வேலை விசாரணைக் குழுக்களை அமைப்பதாகும். இலங்கை அரசு இதற்குப் பேர் போனது எனலாம். உதாரணமாக 17 பிரெஞ்சு அரசு சார்பற்ற ஊழியர்களின் கொலை விசாரணைக் குழுவின் விதி என்பது உலகறிந்த விடயம்.
ஐக்கிய நாட்டு மதியுரைக் குழுவை வரவேற்கும் அதே நேரத்தில் ஐ.நா.சபை அதற்கு மேல் சுயாதீனமாக இயங்கும் விசாரணைக் குழுக்களை அமைத்து, இலங்கை சுதந்திரம் அடைந்த நாள் முதல் இழைக்கப்பட்ட எல்லா அநீதிகளையும் பற்றி அரசியல்வாதிகள் உட்பட அனைவரையும் விசாரணைக்கு உட்படுத்துமாறு நாம் வேண்டுகிறோம். இத்தகைய குற்றங்கள் ஜனவரி, 2009இல் இருந்து மே, 2009 வரை மாத்திரம் நிகழ்த்தப்பட்டவை அல்ல. இலங்கையின் சுதந்திரம் முதல் 62 வருடங்களுக்கு இவை தொடர்பாகப் புரியப்பட்டன என்பது முக்கியம்.
இதைக் குறிக்கோளாகக் கொண்டு, தமிழ் மக்களுக்கு நீதி கோரி, உலகளாவிய தமிழ் மக்களின் இதயங்களில் இன்னும் உறுத்திக் கொண்டிருக்கும் இன்றைய நாளில் (23 ஜூலை) இலண்டனில் இருந்து தொடங்கி பிரான்ஸ் ஊடாக ஜெனிவாவில் உள்ள ஐ.நா.சபை வரை நடைபயணத்தை மேற்கொள்ளும் இளைஞர் சிவந்தனுக்கு எமது ஆதரவையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றோம்.
தமிழ் மக்கள் பேரவை பிரான்ஸ் |