கடந்த புதன்கிழமை கொழும்புக்கு வருகை தந்த அமெரிக்காவின் தெற்கு, மத்திய, ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவி வெளிவிவகார அமைச்சர் ரொபேர்ட் பிளேக்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரு உறுப்பினர்கள் சந்தித்துள்ளனர். இச்சந்திப்பின் போதே அவர்கள் இக்கருத்தைத் தெரிவித்ததாக அறியவருகிறது.
இன ரீதியான நல்லிணக்கம் ஏற்படுவதற்கு அரசியல் தீர்வொன்றே வழிசமைத்துக் கொடுக்கும் என்று தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.க்கள் ரொபேர்ட் பிளேக்கிடம் கூறியுள்ளனர். அரசியல் இணக்கப்பாட்டிற்கான எந்தவொரு யோசனைகளையும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் முன்வைத்திருக்கவில்லை எனவும் யுத்தம் முடிவடைந்து ஓராண்டுக்கும் மேல் சென்றுவிட்டதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
அத்துடன், வடபகுதியில் ஆயுதப் போராட்டம் முடிவடைந்திருக்கின்ற போதிலும் அப்பகுதியை இராணுவ மயமாக்கும் நடவடிக்கைகள் அதிகரித்துவருவதாகவும் ரொபேர்ட் பிளேக்கிடம் அவர்கள் முறைப்பாடு தெரிவித்ததாக அறியவருகிறது.
இது இவ்வாறிருக்க இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதையிட்டு அமெரிக்கா கவலைப்படவில்லையென ரொபேர்ட் பிளேக் கூறியுள்ளார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் ஏனைய அரசியல், வர்த்தக தலைவர்களை கடந்த புதன்கிழமை சந்தித்த பின் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது ஒவ்வொருவரினதும் தேசிய மட்டத்திலான அபிலாஷைகளை அமெரிக்காவும் சீனாவும் அறிந்துகொண்டிருப்பதாகவும் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக தொடர்புகளைப் பேணி வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். இந்த விடயங்கள் குறித்து சீன வெளிவிவகார அமைச்சருடன் தான் கலந்துரையாடி இருப்பதாகவும் பிளேக் கூறியுள்ளார்.
அதேசமயம், ஈரானுடனான இலங்கையின் பிணைப்புகள் தொடர்பான விவகாரத்தை ராஜபக்ஷவுடன் தான் கதைத்திருப்பதாகவும் பிளேக் கூறியுள்ளார். ஈரான் தொடர்பான அமெரிக்காவின் கவலைகள் குறித்து இலங்கைத் தலைவர்கள் அறிந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், ஈரான் தொடர்பான ஐ.நா.பாதுகாப்புச் சபையின் தீர்மானங்கள் பற்றி இலங்கைத் தலைவர்களுக்குத் தெரிந்திருப்பது குறித்தும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். |