Switch to
   
   
   
செய்தி
இலங்கை விவகாரத்தை கையாளத் தகுதியற்ற சக்திகளிடம் தமிழக, மத்திய ஆட்சி சிக்கியுள்ளது: தினமணி நாளிதழ்
[ ஞாயிற்றுக்கிழமை, 18 யூலை 2010, 12:23.17 AM GMT +05:30 ]
இலங்கை விவகாரம் தென்னிந்தியா வின் அமைதிக்கு ஊறு விளைவிக்கும் ஆபத்து என்பதை உணர்ந்த மத்திய அரசைப் புரிய வைத்து நடவடிக்கை எடுக்க வைக்கும் திறமையற்ற சக்திகளிடம் 20 ஆண்டுகளாகத் தமிழகத்தின் ஆட்சி சிக்கிவிட்டது. என்று தமிழக ஆட்சியாளர்களைச் சாடி நேற்றைய தினமணி நாளிதழில் ஆசிரியர் தலையங்கம் தீட்டப்பட்டுள்ளது.

அதே ஆசியர் தலையங்கத்தில் ஒரு ராஜபக்ஷவை எதிர்கொள்ளும் இராஜதந்திரம் கூடத் தெயாதவர்களின் கைகளில் நாடும் ஆட்சியும் அதிகாரம் சிக்கிச் சீரழிகின்றது என்று மத்திய அரசின் கையாலாகாத்தனம் பற்றியும் குறிப்பிட்டுள்ளதுடன் இந்தக் குழம்பிய குட்டையில் ஏன் சீனாவும் இலங்கையும் மீன்பிடிக்க முற்படாது என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

ஆசிரியர் தலையங்கத்தின் முழு விபரம் வருமாறு,

இலங்கைத் தமிழர் பிரச்சினையை மட்டுமல்ல, இலங்கை தொடர்புடைய எந்தப் பிரச்சினையையும் ஏதோ நமக்கு எந்தவிதத்திலும் சம்பந்தமே இல்லாத அந்நிய நாட்டின் பிரச்சினை என்று இந்தியா ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.

இலங்கையைச் சுற்றியுள்ள கடற்பகுதிகளில் மீன்பிடிக்கும் உரிமை என்பது இந்திய மீனவர்களைப் பாதிக்கக்கூடியது என்ற வகையில் மட்டுமல்லாமல், இந்தியாவின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் தரக்கூடிய ஒரு பிரச்சினை என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.

அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும், இலங்கையில் முல்லைத்தீவுப் பகுதிகளில் மீன்பிடிக்க சீனர்களுக்கு அனுமதி அளிக்க இலங்கை தயாராகி விட்டதாகத் தெரிகிறது.

இலங்கையின் வளர்ச்சிப் பணிகளில் துணை புரிகிறோம் என்கிற சாக்கில், பெருமளவில் சீனா கால் பதித்திருப்பதுடன் இலங்கை இராணுவத்துக்கும் அதிக அளவில் உதவ முன்வந்திருப்பது, இந்தியாவுக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக மாறும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

கடந்த முப்பது ஆண்டுகளாக நடந்த தமிழர்களின் சம உரிமைப் போராட்டம் தகர்க்கப்பட்ட நிலையில், இப்போதைக்கு வட இலங்கையில் வசிக்கும் பெருவாரியான தமிழர்களின் ஒரே வாழ்வாதாரம் கடலில் மீன்பிடிப்பது மட்டுமே. விவசாயம் முழுமையாக அழிந்து விட்ட நிலைமை. தொழில்வளம் என்பது பெயருக்குக்கூடக் கிடையாது. பழைய நிலைமைக்குத் திரும்பி இந்தப் பகுதிகளில் சகஜ வாழ்க்கை ஏற்பட வேண்டுமானால் குறைந்தது 20 ஆண்டுகளாவது தேவைப்படும் என்கிற சூழ்நிலையில், இவர்கள் மீன்பிடித்து வாழும் பிழைப்பிலும் மண் விழுந்து விடுமோ என்கிற நியாயமான அச்சம் எழுகிறது.

இலங்கையில் முல்லைத்தீவுக் கடல் பகுதியில் மீன் பிடிக்கலாம் என்கிற அறிவிப்பு, பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் தேடிக் காத்திருந்த தமிழர்களுக்கு மட்டுமல்ல, இந்திய மீனவர்களுக்கும் மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆனால், இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, நந்திக்கடல் பகுதியில் இறால் பண்ணைகளை அமைக்க சீனர்களுக்கு இலங்கை அரசு அனுமதி அளிப்பதாக வந்த தகவல், அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

நந்திக்கடல் பகுதிகளில் 60.45 சதுர கி.மீ. சுற்றளவுக்குப் பல்வேறு வகையான இறால்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இந்தப் பகுதியில் இறால் பண்ணைகளை அமைப்பதன் மூலம், மீன் பிடிப்பதன் மூலம் பெரிய அளவில் இறால் ஏற்றுமதியில் சீனர்கள் ஈடுபடுவர் என்று கருத வாய்ப்பிருக்கிறது. இந்த இறால் பண்ணைத் திட்டத்தை சீன அரசின் உதவியுடன் இலங்கை அரசே மேற்கொள்ளப் போவதாகவும் தகவல்கள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன.

ஒருவேளை, விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்துக்கும் இடையே நடந்த போரில் மரணமடைந்த ஆயிரக்கணக்கான விடுதலைப் புலிகளின் உடல்கள் இந்தப் பகுதியில் இன்னும் அகற்றப்படாமல் இருக்கலாம் என்றும், சீனர்களின் உதவியுடன் அந்த உடல்களை முறையாக அழிக்காவிட்டால், தொற்று நோய் பரவும் ஆபத்து ஏற்படும் என்றும் சில இணையதள செய்திகள் தெரிவிக்கின்றன.

இறால் பண்ணை என்கிற பெயரில், சீன உதவியுடன் நாற்றமடித்துக் கொண்டிருக்கும் பிணங்களை அப்புறப்படுத்தித் துப்புரவு செய்யும் நோக்கத்தில்தான் இப்படி ஒரு முயற்சி நடை பெறுகிறது என்கிற ஐயம் ஏற்படுகிறது.

எது எப்படி இருந்தாலும், இலங்கையின் வடக்குப் பகுதியில் மீன் பிடிக்கும் உரிமை சீனர்களுக்குத் தரப்படுவதை இந்தியா அனுமதிப்பது என்பது, தேவையில்லாத பாதுகாப்பு அச்சுறுத்தலை வலிய வரவழைத்துக் கொள்வதற்கு ஒப்பானது என்பதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது. ராஜபக்ஷ தலைமையிலான இலங்கை அரசு, சீனா என்கிற பூச்சாண்டியைக் காட்டிக் காட்டி இந்தியாவை மிரட்டிப் பணிய வைத்துக் கொண்டிருப்பது போதாதென்று, இன்று இல்லையென்றால் நாளை, சீனாவுடன் கைகோர்த்துக் கொண்டு இந்தியாவுக்கு எதிராக அணிசேரும் வாய்ப்பை நாம் ஏற்படுத்திக் கொடுத்துவிடலாகாது.

ஆப்கானிஸ்தான் பிரச்சினையில் இந்தியாவுக்குக் கருத்துச் சொல்லும் உரிமையும், தனது பாதுகாப்புக் கருதித் தலையிடும் உரிமையும் உண்டு என்று இந்திய தேசியப் பாதுகாப்புச் செயலர் தெரிவிக்கிறார். நேபாளம் இந்தியாவை ஒட்டிய தேசம் என்பதால் அந்த நாட்டு நிகழ்வுகளில் இந்தியாவுக்கு அக்கறை உண்டு என்று பிரதமர் உரிமை கொண்டாடுகிறார்.

மியன்மாரிலும், பங்களாதேஷிலும் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரான சக்திகள் இயங்குவதை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று வெளிவிவகாரத்துறை அமைச்சர் தெளிவுபடுத்துகிறார்.

ஆனால், இலங்கை பற்றிய பேச்சு வரும்போது மட்டும், இவர்கள் அனைவருமே ஒத்த குரலில் “அது இன்னொரு நாடு சம்பந்தப்பட்ட விஷயம்' என்று கைகழுவி வேறுபக்கம் திரும்பிக் கொள்கிறார்களே, ஏன்?

அறுபதுகளில் காமராஜ், பக்தவத்சலம் போன்ற தலைவர்கள் தமிழகத்தின் நலனிலும், இலங்கைத் தமிழர் நலனிலும், இந்தியாவின் நலனிலும் அக்கறை கொண்டிருந்ததுடன், தமிழர் நலன் சம்பந்தப்பட்டிருந்ததால் இலங்கைப் பிரச்சினையில் அன்றைய மத்திய ஆட்சியாளர்களுக்கு சரியான வழிகாட்டுதலை அளித்து வந்தனர்.

எழுபதுகளில், சி. சுப்பிரமணியம், பழ. நெடுமாறன் போன்றோர், தென்னிந்தியா அமைதிப் பூங்காவாக இருக்க இலங்கை இந்தியாவுக்கு அடங்கி இருப்பது அவசியம் என்பதை டில்லிக்கு உணர்த்திச் செயற்பட வைத்தனர்.

எண்பதுகளில் எம்.ஜி.ஆர்., ஆர். வெங்கட் ராமன், ஜி.கே. மூப்பனார் போன்றவர்களின் வார்த்தைக்கு டில்லி செவி சாய்த்தது. இலங்கை அரசு நமது கட்டுக்குள் அடங்கி இருந்தது.

இலங்கையில் நடைபெற்று வரும் இனப்படுகொலையும், தமிழர்கள் மீதான தொடர் தாக்குதல்களும், வருங்காலத்தில் தென்னிந்தியாவின் அமைதிக்கு ஊறு விளைவிக்கும் ஆபத்து என்பதை உணர்ந்து, மத்திய அரசைப் புரிய வைத்து, நடவடிக்கை எடுக்க வைக்கும் திறமையற்ற சக்திகளிடம் 20 ஆண்டுகளாகத் தமிழகத்தின் ஆட்சி சிக்கிவிட்டதன் விளைவு, இப்போது சீனா இலங்கையில் பலமாகக் காலூன்றத் தொடங்கிவிட்டிருக்கிறது.

இந்து மகா சமுத்திரத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்க அதிகரிக்க, அருணாசலப் பிரதேசம், அந்தமான், நிக்கோபார் தீவுகளும் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவே ஆபத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படப் போகிறது. ஒரு ராஜபக்ஷவை எதிர் கொள்ளும் இராஜதந்திரம்கூடத் தெரியாதவர்களின் கையில் நாடும் ஆட்சியும் அதிகாரம் சிக்கிச் சீரழிகிறது. இந்தக் குழம்பிய குட்டையில் ஏன் சீனாவும் இலங்கையும் மீன்பிடிக்க முற்படாது?







பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் மாநாடு சிறப்புற வாழ்த்துக்கின்றோம்
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 10:13.19 PM ] []
உ.த.ப. இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மாநாடு சிறப்புற நடைபெற ஹம் ஸ்ரீகாமாக்ஷி அம்பாள் ஆலய ஆதீனகர்த்தா ஆறுமுக பாஸ்கரகுருக்கள், ஜேர்மனி அருட்திரு அந்தோனி பெர்னாண்டோ பெனற் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். [மேலும்]
(2ம் இணைப்பு)
கிளிநொச்சி மாவட்ட பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கல்விமேம்பாட்டு உதவி நிதி கோரிக்கை
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 08:37.04 PM ] []
உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தின் அகம் புலம் தமிழர் வாழ்வியல் மகானாடினை முன்னிட்டு உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் ஐரோப்பிய ஒன்றியம் கிளிநொச்சி மாவட்ட அதிபர்கள் சங்கத்துடன் இணைந்து முன்னெடுக்கும்.. [மேலும்]
18 வது அரசியலமைப்பு சீர்திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:40.49 PM ]
18 வது அரசியலமைப்பு சீர்திருத்தம் மூன்றில் இரண்டு அதிகாரத்துடன் சற்று முன்னர் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.  சீர்திருத்தத்திற்கு ஆதரவாக 161 வாக்குகளும் எதிராக 17 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. [மேலும்]
பாராளுமன்ற முன்றலில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆர்ப்பாட்டக் காட்சிகள்
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 12:56.28 PM ] []
உத்தேச 18 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கு ஆதரவளித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள் இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. [மேலும்]
புளொட்- புலிகள் மோதலும் அதனை வேடிக்கை பார்த்த இந்தியப் படையும்: உண்மையின் தரிசனம் (பாகம்-17)
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 06:29.07 AM ] []
இந்திய இலங்கை ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இலங்கைக்கு மீண்டும் வந்த புளொட் அமைப்பு வடக்கு கிழக்கின் பல பகுதிகளிலும் முகாம்களை அமைத்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்தன. [மேலும்]
தமிழின உயிர்கொலை நாள்- செப்டம்பர் 5 : கிழக்கு பல்கலைக்கழக அகதிமுகாம் படுகொலையின் 20ஆண்டு நினைவு நாள் இன்று - இரா.துரைரத்தினம்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 12:24.36 PM ] []
ஓகஸ்ட் செப்டம்பர் மாதங்கள் கிழக்கு மாகாண மக்களைப் பொறுத்தவரை அவர்களின் வாழ்வில் மறக்க முடியாத துன்பங்களையும் இழப்புக்களையும் கொடுத்த மாதங்கள். 1990ஆம் ஆண்டு யூன் மாதம் விடுதலைப்புலிகளுக்கும் ஸ்ரீலங்கா படைகளுக்கும் இடையில் போர் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு அம்பாறை பிரதேசங்களை ஸ்ரீலங்கா படைகள்..... [மேலும்]
விளம்பரம்
advertisement