மேற்படி ஜோதிரவி சிற்றம்பலம் சார்பாக வாதாடும் பிரபல சட்டத்தரணியான திருவாட்டி பார்பரா ஜக்மன் அவர்களால் தொடுக்கப்பட்டுள்ள இவ்வழக்கு கனடிய அரசின் இரண்டு அமைச்சர்களை குறிவைத்தே நகர்த்தப்படுகிறது எனத் தெரியவருகிறது.
இந் நபர் நாடுகடத்தப்படுவதற்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் செய்த ஒரு கனடியக் குழு இந்நபர் நாடுகடத்தப்படுமிடத்து அவரிற்கு அங்கு தீங்கு ஏற்படாது என்பதை தங்கள் பரிந்துரையாக கொடுத்திருந்ததது. அதனடிப்படையில் செயற்பட்ட கனடிய குடிவரவு அமைச்சர் ஜேசன் கெனி, மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பமைச்சர் விக் ரோவ்ஸ் ஆகியோர் இந்த நாடுகடத்தலிற்கான அனுமதியை வழங்கினர்.
எனினும் இவ்வாறு நாடுகடத்தப்பட்ட சிற்றம்பலம் யோதிரவி இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களிற்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்ற பிரத்தியேக செய்தியை தமிழ்வின் யூன் 28ம் திகதி வெளியிட்டிருந்தது.
கனடாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட ஜோதிரவி சிற்றம்பலம் தனது சொந்த ஊரான கரவெட்டி செனறு தன்னை மீள் வாழ்க்கை உட்படுத்தி வந்த போதே கொழும்பில் இருந்து சென்ற சிறப்புப் பொலிஸ்படையால் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு 4ம் மாடியில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார் என்பதையே தமிழ்வின் தனது பிரத்தியேக செய்தியில் எடுத்து வந்திருந்தது.
இந்நிலையில் இச்சம்பவம் உண்மையென்பதை உறுதிப்படுத்தியுள்ள மேற்படி நபரின் சட்டத்தரணி மேற்படி அமைச்சர்கள் இருவரும் முன்யோசனையற்ற அல்லது விவேகமற்ற முறையில் இந்த விவகாரத்தில் செயற்பட்டிருக்கிறார் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஜோதிரவியும், அவரது தந்தையும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும், ஜோதிரவி நான்காம் மாடிக்கு கொண்டு செல்லப்பட்டு குற்றப்புலனாய்வுப் பிரிவால் விடுதலைப்புலிகளிற்கு பணம் சேர்த்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு துன்புறுத்தப்பட்டார் எனவும் மேற்படி சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
மேலும் கனடாவிலிருந்து இலங்கைக்கு விஜயம் செய்த குழு, இலங்கை அரசு இந் நபரை விடுதலைப்புலிகளிற்கு பணம் சேகரித்த ஒரு நபராகக் குற்றஞ்சாட்டிய தகவலை அமைச்சர்களிற்கு வழங்குவதற்குத் தவறி விட்டார்கள் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இலங்கை சம்பந்தப்பட்ட நாடு கடத்தல் விவகாரமொன்றில் தீர்க்கமான முடிவிற்கு இட்டுச் செல்லக்கூடியதாக இவ்வழக்கு விசாரணை அமையுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக நீதிமன்று ஜோதிரவிக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கினால் மேற்படி அமைச்சர்கள் இருவரின் அரசியல் எதிர்காலமும் பாதிக்கப்படும் என்பதோடு ஈழத்தமிழர்கள் தொடர்பான நிலைப்பாட்டை குடிவரவுத் திணைக்களம் மீள்பரிசீலனை செய்ய வேண்டியேற்படும் எனவும் தெரிய வருகிறது.
அதேநேரம் கனடாவில் உள்ள தனது மனைவியுடன் ஜோதிரவி தொலைபேசியில் உரையாடுவதற்கு அனுமதிக்கப்படுகின்ற போதிலும் பொலிஸாரின் பிரசன்னத்தின் மத்தியிலேயே அவர் இதற்கு அனுமதிக்கப்படுவதாக சட்டத்தரணி தெரிவித்துள்ளார். |