சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொது செயலாளர் ஹசன் அலியின் தகவல்படி, இந்த சந்திப்பு நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறும் என தெரிகிறது.
இதற்கிடையில் நேற்றைய தினமும் இரண்டு கட்சிகளும் சந்தித்துள்ளன.
எனினும் இந்த சந்திப்புக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து அதன் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மாத்திரமே கலந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக இந்த சந்திப்பை மீண்டும் நடத்துவதென இரு தரப்பினருக்கும் இடையில் இணக்கம் காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் சுரேஸ் பிரேமசந்திரன் ஆகியோர் தொடர்ந்தும் இந்தியாவிலேயே தங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
அவர்கள் நேற்றைய தினம் சென்னையில் தங்கி இருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
எனினும் அவர்கள் யாரையும் சந்திக்கின்றனரா என்பது குறித்த தகவல்கள் இதுவரையில் வெளியாகவில்லை.
இதேவேளை நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்தியா சென்றிருந்த போது மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் குறித்து முஸ்லிம் காங்கிரஸுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
கூட்டமைப்பு சார்பில் கலந்து கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இந்த விளக்கமளிப்பை மேற்கொண்டிருந்தார். இதன் போது இந்திய பிரதமர் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வலியுறுத்திய சில விடயங்களையும் அவர் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக சிறுபான்மை கட்சிகளுக்கு இடையில் மிகச்சிறந்த இணக்கப்பாடு ஒன்று காணப்பட வேண்டும் என இந்திய தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
அவ்வாறின்றி சிறுபான்மை கட்சிகளுக்கு இடையில் பிளவுகள் காணப்படும் பட்சத்தில் அரசாங்கம் அதனை பயன்படுத்திக் கொண்டு இந்தியா முன்வைக்கும் யோசனைகளை தட்டிக்கழிக்கும் அபாயம் இருப்பதாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங், தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் சிறுபான்மை மக்களுக்கு உடனடியாக அரசியல் தீர்வு ஒன்று வழங்க வேண்டும் என்பதில் இந்தியத் தரப்பில் உறுதியாக இருப்பதாகவும் சுமந்திரன் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸிடம் தெரிவித்துள்ளார். |