இராமேசுவரம் மற்றும் புதுக்கோட்டை, நாகை மாவட்டங்களைச் சேர்ந்த 20 ஆயிரம் மீனவர்கள் விசைப்படகுகளில் இந்திய, இலங்கை கடல் எல்லையில் மீன் பிடித்து வருகின்றனர்.
கடந்த ஜூன் முதல் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கியும், படகுகளைச் சேதப்படுத்தியும், மீன்களைப் பறித்தும் செல்கின்றனர்.
மேலும் இலங்கை கப்பல்களில் சீனாவைச் சேர்ந்த கடற்படை வீரர்களும் உள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது பாக் நீரிணைப்பு கடலில் இலங்கைக் கடற்படையினர் தங்கள் வலிமையை நிலைநாட்டி வருகின்றனர்.
இதுகுறித்து ராமேசுவரம் மீனவர்கள் செய்தியாளர்களிடம் கூறியது:
இராமேசுவரத்தில் நவம்பர் 4-ம் தேதி 400 விசைப்படகுகள் மீன் பிடிக்கச் சென்றன. இந்தப் படகுகள் நடுக்கடலில் வலையை வீசியபோது அங்கு இலங்கை கடற்படையின் 20 போர் கப்பல்கள் ரோந்து வந்தன.
முன்பெல்லாம் 5 முதல் 8 கப்பல்களில்தான் ரோந்து சுற்றி வருவர். தற்போது கூடுதலான கப்பல்களுடன் ரோந்து வந்து எங்களை விரட்டியடித்தனர். நாங்கள் மீன்பிடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தோம்.
மீன் வளம் அதிகம் உள்ள பாக்கு நீரிணை கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் ஆதிக்கம் செலுத்துவதால், தமிழக மீனவக் குடும்பங்கள்,தொழிலாளர்கள் 5 லட்சம் பேர் வேலை இழக்கும் நிலை உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். |