இது தொடர்பாக நாங்கள் பல்வேறுபட்ட பிரேரணைகளையும், குறிப்பான கேள்விகளையும் புலத்துத் தமிழ் சமூகத்திடமிருந்து தொடர்ந்தும் பெற்று வருகின்றோம்.
மேலும், கடந்த மாத ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட நாடுவாரியான செயற்பாட்டுக் குழுக்களும் தங்களது பணிகளை ஆரம்பித்துள்ளன.
எதிர்வரும் வாரங்களில் தமிழ்மக்கள் பெருந்தொகையாக வாழும் மற்றைய நாடுகளுக்கான இணைப்பாளர்களும், செயற்பாட்டுக்குழுக்களும் அறிவிக்கப்படவுள்ளன.
ஏப்பிரல் 2010ல் தேர்தல்களை நடத்துவதறகுரிய வகையில் பணிகள் முன்னேற்றம் கண்டு வருகின்றன.
எதிர்வரும் இரண்டு மாத காலங்களுக்கு புலத்துத் தமிழ் சமூகத்துடன் எமது இதுவரையிலான முன்மொழிவு மற்றும் குறிப்பிடப்பட்ட சில கேள்விகள் தொடர்பாகப் பரவலான ஆலோசனைகள் மேற்கொள்ள நாங்கள் தீர்மானித்துள்ளோம்.
இந்தச் சந்தர்ப்பத்தில் அண்மைக்காலமாக எழுப்பபட்டுவரும் சில கேள்விகள் தொடர்பான எமது நிலைப்பாட்டினை தெளிவுபடுத்த விரும்புகின்றோம்.
2009 யூனில் வெளியிடப்பட்ட எமது முதலாவது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது போன்று நாடு கடந்த தமிழீழ அரசுவினை நிறுவும் செயற்பாடானது அனைத்துத் தமிழர் அலகுகளையும் ஒன்றுபடுத்துவதற்கான அடிப்படையில் சனநாயக வழியிலமைந்த ஒரு முன்னெடுப்பாகும்.
புலத்துத்தமிழ் சமூகம் சனநாயக உரிமைகளைப் பிரயோகிப்பதற்கு நேரிடையான தேர்தல் ஒரு சிறப்பான வாய்ப்பு என்பதே எங்களது தெளிவுபடுத்தப்பட்ட நிலைப்பாடாகும். இதுவொன்றே நாடுகடந்த தமிழீழ அரசுக்கான சட்டபூர்வத்தன்மையைத் தரும்.
இதனால் நேரிடையாக தேர்வு செய்யப்பட்டவர்களைத் தவிர்ந்த பிறர் எவரும் நாடு கடந்த அரசுவின் அங்கமாக முடியாது. இந்த நாடு கடந்த தமிழீழ அரசுவானது தனது முதல் விடயமாக அரசியலமைப்பு நிர்ணய சபையாகச் செயற்படும்.
மேலும், நாடுகடந்த தமிழீழ அரசினது ஆட்சிசார் செயற்பாடுகள் தொடர்பாக புலம்பெயர்ந்த தமிழர் வாழும் நாடுகள் தோறும் செயற்படும் அல்லது உருவாக்கப்படும் கட்டமைப்புக்களுடன் எத்தகைய உறவினைப் பேணுவது என்பதை இவ்வாறு நேரிடையாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களே முடிவு செய்வார்கள்.
சில நாடுகளில் தேர்தல்கள் மூலம் புதிய தேசியளவிலான கட்டமைப்புக்களை உருவாக்கும் முயற்சிகள் இடம்பெறுவதை நாங்கள் அறிவோம். நாங்கள் அத்தகைய சனநாயக முயற்சிகளை வரவேற்கின்றோம்.
ஆனாலும், இந்த வேளையில் அவ்வகை முயற்சிகளை நாங்கள்; ஆதரிக்கவோ அல்லது எதிர்க்கவோ இல்லை. ஏனெனில், அவ்வாறு செய்வதென்பது அரசு அமைப்பதற்கான செயற்குழுவின் சனநாயகமற்ற ஊகநடவடிக்கையாக அமைந்துவிடும்.
எம்முடனான தொடர்புகளுக்குரிய மின்னஞ்சல் முகவரி: info@govtamileelam.org
விசுவநாதன் உருத்திரகுமாரன் இணைப்பாளர் |